காண்டிராக்டர் வீட்டில் சிக்கிய ரூ.42 கோடி பற்றி அமலாக்கத்துறை விசாரணை; பசவராஜ் பொம்மை வலியுறுத்தல்

வருமான வரி சோதனையில் காண்டிராக்டர் வீட்டில் சிக்கிய ரூ.42 கோடி குறித்து அமலாக்கத்துறை விசாரணை நடத்த வேண்டும் என்று முன்னாள் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை வலியுறுத்தியுள்ளார்.
காண்டிராக்டர் வீட்டில் சிக்கிய ரூ.42 கோடி பற்றி அமலாக்கத்துறை விசாரணை; பசவராஜ் பொம்மை வலியுறுத்தல்
Published on

பெங்களூரு:

வருமான வரி சோதனையில் காண்டிராக்டர் வீட்டில் சிக்கிய ரூ.42 கோடி குறித்து அமலாக்கத்துறை விசாரணை நடத்த வேண்டும் என்று முன்னாள் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை வலியுறுத்தியுள்ளார்.

கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கமிஷன் கொள்ளை

கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பிறகு உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம் முதல் அனைத்து விஷயங்களிலும் ஊழல் நடந்து வருகிறது. கர்நாடக வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு தற்போது காங்கிரஸ் ஆட்சியில் ஊழல் நடக்கிறது. பகிரங்கமாகவே கமிஷன் கொள்ளை நடக்கிறது. காண்டிராக்டர்களுக்கு இந்த அரசு பாக்கித்தொகையை விடுவித்தது. அதன் பிறகு காண்டிராக்டர் வீட்டில் நடந்த வருமான வரி சோதனையில் ரூ.42 கோடி ரொக்கம் சிக்கியுள்ளது. காங்கிரஸ் அரசு காண்டிராக்டர்களிடம் 10 சதவீத கமிஷன் பெற்றது நிரூபணம் ஆகியுள்ளது.

காண்டிராக்டர்களின் வீடுகளில் இவ்வாறு சோதனை நடத்தினால் இன்னும் அதிகளவில் பணம் கிடைக்கும். நாங்கள் ஆட்சியில் இருந்தபோது, எந்த விதமான ஆதாரமும் இன்றி எங்கள் மீது கமிஷன் குற்றம்சாட்டினர். தற்போது பகிரங்கமாகவே கமிஷன் கொள்ளை நடக்கிறது. காண்டிராக்டர் சங்கம் கமிஷன் மையமாக திகழ்கிறது. அரசும், காண்டிராக்டர்களும் ஒன்றாக சேர்ந்து மாநிலத்தின் வரிப்பணத்தை கொள்ளையடித்து உள்ளனர்.

லோக்அயுக்தா விசாரணை

ரூ.42 கோடி சிக்கியது குறித்து அமலாக்கத்துறை விசாரணை நடத்த வேண்டும். நாங்கள் கமிஷன் வாங்கியதை யாராவது பார்த்துள்ளீர்களா? என்று சித்தராமையா கேட்டுள்ளார். எங்களது ஆட்சியில் கமிஷன் வாங்கியதை யாராவது பார்த்தார்களா?. இந்த பணம் சிக்கியது குறித்து நீதிபதி நாகமோகன்தாஸ் விசாரணை கமிஷன் விசாரிக்க வேண்டும். இல்லாவிட்டால் லோக்அயுக்தா விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

5 மாநில சட்டசபை தேர்தலுக்கு கர்நாடகத்தை ஏ.டி.எம். ஆக காங்கிரஸ் பயன்படுத்துகிறது. அதனால் ஊழல் ஒழிப்பு குறித்து பேசும் தகுதியை சித்தராமையா இழந்துவிட்டார். கமிஷன் கொடுத்த காண்டிராக்டர்களுக்கு மட்டுமே பாக்கியை விடுவித்துள்ளனர். ஒக்கலிகர் சமூகம் குறித்து முற்போக்கு சிந்தனையாளர் பகவான், இழிவான கருத்துக்களை கூறியுள்ளார். இது சரியல்ல. இத்தகையவர்களுக்கு அரசு ஆதரவு வழங்குவதால் தான் இவ்வாறு பேசுகிறார்கள்.

இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com