

தானே,
போக்குவரத்து போலீஸ் நிலையம் முன்பு போலீசாரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
போலீசார் மீது தாக்குதல்
தானே மாவட்டம் மும்ரா, கவுசா தன்வார் நகரில் சம்பவத்தன்று போக்குவரத்து போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக 2 மோட்டார் சைக்கிளில் 4 பேர் ஹெல்மெட் அணியாமல் வந்தனர். போலீசார் அவர்கள் வந்த 2 மோட்டார் சைக்கிள்களையும் மடக்கினர். அவர்களிடம் மோட்டார் சைக்கிளுக்கான உரிய ஆவணங்கள் எதுவும் இல்லை. இதையடுத்து போலீசார் 2 மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த மோட்டார் சைக்கிள்களை போக்குவரத்து போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.
இந்தநிலையில் அங்கு வந்த அவர்கள் தங்கள் மோட்டார் சைக்கிளை திரும்ப தருமாறு போக்குவரத்து போலீசாரிடம் கேட்டனர். போக்குவரத்து போலீசார் மோட்டார் சைக்கிளுக்கான ஆவணங்களை காட்டிவிட்டு, அபராதம் செலுத்திவிட்டு மோட்டார் சைக்கிளை பெற்று செல்லுமாறு கூறினர்.
இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் அவர்கள் போக்குவரத்து போலீஸ் நிலையம் முன்பு வைத்து போலீசாரை சரமாரியாக தாக்கினர். மேலும் கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டல் விடுத்தனர்.
3 பேர் கைது
இந்தநிலையில் தகவல் அறிந்து அங்கு மும்ரா போலீசார் விரைந்து வந்தனர். போலீசார் வருவதை பார்த்ததும் அவர்கள் அங்கிருந்து தப்பியோடினர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி, போக்குவரத்து போலீசாரை தாக்கிய மும்ரா, அம்ருத்நகரை சேர்ந்த அப்னான் குரேசி(வயது24), மும்ரா அமினா பேலசை சேர்ந்த சம்சூதின்(44), மற்றும் மைனர் வாலிபர் ஒருவரை கைது செய்தனர். மேலும் ஒருவரை தேடிவருகின்றனர்.