பிச்சைக்காரரின் துணிப்பையில் ரூ.58 ஆயிரம் ரொக்கம்

துமகூருவில் மனைவியுடன் சண்டை போட்டு விட்டு 10 ஆண்டுக்கு முன்பு பிரிந்து வந்த பிச்சைக்காரரின் துணிப்பையில் ரூ.58 ஆயிரம் ரொக்கம் இருந்தது. அவரை, குடும்பத்தினருடன் மீண்டும் போலீசார் சேர்த்துவைத்துள்ளனர்.
பிச்சைக்காரரின் துணிப்பையில் ரூ.58 ஆயிரம் ரொக்கம்
Published on

பெங்களூரு:

துமகூருவில் மனைவியுடன் சண்டை போட்டு விட்டு 10 ஆண்டுக்கு முன்பு பிரிந்து வந்த பிச்சைக்காரரின் துணிப்பையில் ரூ.58 ஆயிரம் ரொக்கம் இருந்தது. அவரை, குடும்பத்தினருடன் மீண்டும் போலீசார் சேர்த்துவைத்துள்ளனர்.

துணிப்பையில் ரூ.58 ஆயிரம் ரொக்கம்

துமகூரு மாவட்டம் கொரட்டகெரே தாலுகா சின்னராயன துர்கா, மரேநாயக்கனஹள்ளி கிராமங்களில் கடந்த சில நாட்களாக ஒரு பிச்சைக்காரர் சுற்றித்திரிந்தார். அவர் செல்லும் இடங்களுக்கு எல்லாம் ஒரு துணியை பை போல் சுற்றி வைத்தபடி திரிந்தார். அந்த கிராமங்களில் உள்ள மரத்தடியில் அவர் தங்கி இருந்தார். அந்த நபர் மீது கிராம மக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து, 112 என்ற போலீஸ் கட்டுப்பாட்டை அறையை தொடர்பு கொண்டு அந்த நபர் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து, கொரட்டகெரே போலீசார், அங்கு சென்று அந்த பிச்சைக்காரரை பிடித்து விசாரித்தனர். மேலும் அவரிடம் இருந்த பையை வாங்கி பரிசோதனை செய்தார்கள். அப்போது அவரிடம் சில்லரைகள் மற்றும் ரூபாய் நோட்டுகள் இருந்தது. அவற்றை எண்ணி பார்த்த போத ரூ.58 ஆயிரத்திற்கும் மேல் இருப்பது தெரியவந்தது.

குடும்பத்துடன் சேர்ந்தார்

அதாவது ரூ.20 ஆயிரத்திற்கு நாணயங்களும், ரூ.38 ஆயிரத்திற்கு ரூபாய் நோட்டுகளும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் துமகூரு மாவட்டம் குப்பி தாலுகா ஜேலூர் கிராமத்தை சேர்ந்த குரு சித்தப்பா என்பதும் தெரியவந்தது. அவர், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தனது மனைவியுடன் ஏற்பட்ட குடும்ப சண்டை காரணமாக, வீட்டை விட்டு வெளியே வந்து பிச்சை எடுத்து பிழைப்பு நடத்தி வந்துள்ளார். துமகூரு மட்டும் இல்லாமல் அருகில் உள்ள மாவட்டங்களிலும் அவர் பிச்சை எடுத்துள்ளார்.

இதையடுத்து, ஜேலூரில் உள்ள குரு சித்தப்பாவின் வீட்டு முகவரியை போலீசார் கண்டுபிடித்தனர். பின்னர் அவரது மனைவி மங்களம்மா மற்றும் மகன் பிரவீனை கொரட்டகெரேக்கு சப்-இன்ஸ்பெக்டர் அனுமந்த ராயப்பா வரவழைத்தார். அவர்களிடம், குரு சித்தப்பா ஒப்படைக்கப்பட்டார். இதனால் 10 ஆண்டுகளுக்கு பின்பு மீண்டும் அவர் தனது குடும்பத்துடன் சேர்ந்திருந்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com