தாயை கொலை செய்த பெஸ்ட் பஸ் டிரைவர்

மாந்திரீகம் செய்து திருமணத்திற்கு தடை ஏற்படுத்தியதாக பெற்ற தாயை கொலை செய்த பெஸ்ட் பஸ் டிரைவர், காதலி மற்றும் தம்பியுடன் கைது செய்யப்பட்டார்.
தாயை கொலை செய்த பெஸ்ட் பஸ் டிரைவர்
Published on

மும்பை, 

மாந்திரீகம் செய்து திருமணத்திற்கு தடை ஏற்படுத்தியதாக பெற்ற தாயை கொலை செய்த பெஸ்ட் பஸ் டிரைவர், காதலி மற்றும் தம்பியுடன் கைது செய்யப்பட்டார்.

பெண் கொலை

மும்பை வடலா பஞ்சசீல் நகரை சேர்ந்தவர் விஜய் தாக்குர். இவரது மனைவி நிமலா(வயது42). சம்பவத்தன்று வேலை முடிந்து விஜய் தாக்குர் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டில் நிர்மலா ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். தகவல் அறிந்து சென்ற போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில் நிர்மலா கொலை செய்யப்பட்ட அன்று நள்ளிரவு பெஸ்ட் பஸ் டிரைவரான அவரது மகன் அக்சய் (25), அவரது காதலி கோமல் (22) மற்றும் 15 வயது தம்பி வீட்டில் இருந்து சென்றது அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.

இதையடுத்து போலீசார் அக்சயை தொடர்பு கொண்டு பேசினர். அப்போது அவர் விடுமுறையை கொண்டாட லோனாவாலா சென்று இருப்பதாக கூறினார். ஆனால் அவரது செல்போன் சிக்னல் பன்வெல் பகுதியில் இருந்தது. இதையடுத்து சந்தேகமடைந்த போலீசார் அக்சய், அவரது தம்பி, காதலியை பிடித்து விசாரணை நடத்தினர்.

மாந்திரீகம் செய்ததாக நினைத்து கொலை

இந்த விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது. அக்சய், காதலி கோமலை திருமணம் செய்ய விரும்பினார். ஆனால் அதற்கு நிர்மலா சம்மதிக்கவில்லை என கூறப்படுகிறது. மேலும் கோமலுடனான திருமணத்தை தடுக்க தாய் நிர்மலா மாந்திரீக வேலையில் ஈடுபட்டதாக அக்சய் நினைத்தார். இதனால் ஆத்திரமடைந்த அவர், காதலியுடன் சேர்ந்து சம்பவத்தன்று தாய் நிர்மலாவை கத்தியால் குத்தி கொலை செய்தார். மேலும் அக்சய், தாயை பற்றி தவறாக கூறி 15 வயது தம்பியையும் மூளைசலவை செய்து கொலைக்கு உடந்தையாக்கியது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் மாந்திரீகம் செய்து திருமணத்திற்கு தடை ஏற்படுத்தியதாக தாயை கொலை செய்த பெஸ்ட் பஸ் டிரைவர் அக்சய், அவரது காதலி, தம்பியை கைது செய்தனர். இதில் தம்பி காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார். மற்ற 2 பேரையும் போலீசார் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனா.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com