பெரிய மார்க்கெட் கட்டுமான பணி 5-ந்தேதி தொடங்குகிறது

பெரிய மார்க்கெட் கட்டுமான பணிகளை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆகியோர் வருகிற 5-ந்தேதி தொடங்கி வைக்கிறார்கள்.
பெரிய மார்க்கெட் கட்டுமான பணி 5-ந்தேதி தொடங்குகிறது
Published on

புதுச்சேரி

பெரிய மார்க்கெட் கட்டுமான பணிகளை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆகியோர் வருகிற 5-ந்தேதி தொடங்கி வைக்கிறார்கள்.

5-ந்தேதி பூமிபூஜை

புதுவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் பெரிய மார்க்கெட் ரூ.50 கோடி செலவில் புதியதாக இடித்துகட்டப்பட உள்ளது. பல்வேறு கட்ட போராட்டங்களுக்கு பிறகு மார்க்கெட் கட்டுவதற்கான பூமிபூஜை வருகிற 5-ந்தேதி நடக்கிறது.

இந்த பூமிபூஜையில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆகியோர் கலந்துகொண்டு பணிகளை தொடங்கி வைக்க உள்ளனர்.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் புதுவை நகரில் பல்வேறு இடங்களில் திட்டப்பணிகள் காலதாமதமாகி வருகிறது. இதனால், குறிப்பிட்ட நேரத்தில் வேலை தொடங்காததால் காலவிரயம் ஏற்படுவதுடன் செலவும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக ஒப்பந்ததாரர்கள் தரப்பில் வேதனை தெரிவித்திருந்தனர். இது தொடர்பாக அரசுக்கும் கடிதம் அனுப்பி வைத்தனர். அதன் காரணமாக தற்போது பெரிய மார்க்கெட் உள்ளிட்ட திட்டப்பணிகள் வேகமெடுத்துள்ளது.

வியாபாரிகள் எதிர்ப்பு

பெரிய மார்க்கெட்டை இடித்துவிட்டு புதியதாக கட்ட எதிர்ப்பு தெரிவித்த வியாபாரிகள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தினார்கள். மாற்று இடத்திற்கு செல்லவும் தயக்கம் காட்டி வந்தனர். அரசுடன் பேச்சுவார்த்தை நடத்திய அவர்கள் சில கோரிக்கைளை வலியுறுத்தினார்கள். குறிப்பாக கடைகளை 4 கட்டமாக இடித்து புதிய கடைகளை கட்ட வேண்டும் என்றனர்.

இந்த கோரிக்கையை முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்தித்தும் வலியுறுத்தினார்கள். அப்போது 2 கட்டமாக பெரிய மார்க்கெட்டை இடித்துகட்ட ஏற்பாடு செய்வதாக முதல்-அமைச்சர் ரங்கசாமி உறுதியளித்தார்.

3 மாதம் அவகாசம்

இந்த நிலையில் பெரிய மார்க்கெட் வியாபாரிகளின் அவசர கூட்டம் சாய்பாபா திருமண நிலையத்தில் நடந்தது. அப்போது அரசின் முடிவு குறித்து விவாதிக்கப்பட்டது.

அடுத்ததாக விழாக்காலம் என்பதால் இப்போது கடைகளை இடமாற்றம் செய்வது வியாபாரத்தை பாதிக்கும் என்றும், எனவே 3 மாத கால அவகாசத்தை வழங்கவேண்டும் என்று வலியுறுத்தி அவர்கள் தீர்மானம் நிறைவேற்றினார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com