சினிமாவில் நடிக்க வேண்டும் -சின்னத்திரை நடிகை கோமதிப்பிரியா

சினிமாவில் நடிப்பதற்கு நிறைய வாய்ப்புகள் வந்தது. ‘அசுரன்’ படத்தில் அம்மு அபிராமி ஏற்று நடித்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு முதலில் என்னிடம் தான் கேட்டார்கள்.
சினிமாவில் நடிக்க வேண்டும் -சின்னத்திரை நடிகை கோமதிப்பிரியா
Published on

பெரிய கண்கள் மற்றும் கன்னத்தில் குழி விழும் அழகின் மூலம், தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டு இருப்பவர் நடிகை கோமதிப்பிரியா. தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் வேலைக்காரன் தொடரில் வள்ளி எனும் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பு தளத்தில் பரபரப்பாக இருந்தவரிடம் பேசினோம்.

சின்னத்திரை பயணம் எப்படி இருக்கிறது?

சிறப்பாக இருக்கிறது. வேலைக்காரன் தொடர் மூலம் பிரபலமாகி இருக்கிறேன். தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் நடித்து வருகிறேன்.

பொறியியல் படித்துவிட்டு திரைத்துறைக்குள் வந்தது எப்படி?

பொறியியல் படித்து முடித்ததும், தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றினேன். அந்த சமயத்தில் தொலைக்காட்சித் தொடருக்கான நடிகர்கள் தேர்வில் கலந்து கொண்டேன். வாய்ப்பு கிடைத்ததால் நடிக்க ஆரம்பித்தேன்.

சின்னத்திரை தொடர்களில், நீங்கள் நடித்த கதாபாத்திரங்களில் உங்களுக்கு பிடித்தது எது?

ஓவியா கதாபாத்திரம் என்னுடைய நிஜ வாழ்க்கையை பிரதிபலிப்பது மாதிரியே இருக்கும். அதே சமயம் வேலைக்காரன் தொடரின் வள்ளி கதாபாத்திரம் ஜாலியான, தைரியமான பெண். இரண்டுமே எனக்குப் பிடிக்கும்.

வெள்ளித்திரையில் நடிக்கும் எண்ணம் இருக்கிறதா?

சினிமாவில் நடிப்பதற்கு நிறைய வாய்ப்புகள் வந்தது. அசுரன் படத்தில் அம்மு அபிராமி ஏற்று நடித்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு முதலில் என்னிடம் தான் கேட்டார்கள். அந்த சமயத்தில் தொலைக்காட்சித் தொடரில் நடிப்பதற்காக தேதி கொடுத்து இருந்ததால் நடிக்க முடியாமல் போனது. அந்த வாய்ப்பை நழுவ விட்டதற்காக வருத்தப்பட்டேன். இப்போது ஒப்பந்தம் ஆகி இருக்கும் தொடர்களில் நடித்து முடித்ததும், சிறிய இடைவெளிக்கு பின்பு சினிமாவில் நடிப்பதில் கவனம் செலுத்துவேன்.

நடிப்புத் துறையில் நீங்கள் சந்திக்கும் நேர்மறை மற்றும் எதிர்மறை விஷயங்கள்?

எல்லாத் துறைகளிலும் நேர்மறையான விஷயங்களும், எதிர்மறையான விஷயங்களும் இருக்கும். நாம் தான் நமக்கு தேவையானதை மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும். சமீபத்தில் யூடியூப் சேனல் தொடங்கினேன். அதில் படப்பிடிப்பு தளத்தில் எனது அனுபவங்கள், அழகு குறிப்பு போன்ற பல விஷயங்களை பகிர்ந்துக் கொள்ளப் போகிறேன் என்கிறார் சிரித்து கொண்டே.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com