

நெல்லை:
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள 62 குளங்களில் பறவைகள் கணக்கெடுப்பு பணி நேற்று தொடங்கியது. வெளிநாடுகளில் இருந்து வந்த பறவைகள் பற்றிய விவரம் இன்று தெரியவரும்.
கணக்கெடுப்பு
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள தாமிரபரணி பாசன குளங்களில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி ஆண்டுதோறும் நடந்து வருகிறது. அகத்தியமலை மக்கள் சார் இயற்கை வளம் காப்பு மையம், முத்து நகர் இயற்கை சங்கம், நெல்லை இயற்கை சங்கம், நெல்லை மண்டல வனத்துறை ஆகியவை இணைந்து இந்த கணக்கெடுப்பை நடத்துகின்றன.
பறவைகள், அவற்றின் வாழ்விடங்கள், நீர்நிலைகளை பாதுகாக்கும் பொருட்டு கடந்த 2011-ம் ஆண்டு முதல் இந்த தாமிரபரணி பறவைகள் கணக்கெடுப்பு பணி நடந்து வருகிறது.
ஆயிரக்கணக்கில் பறவைகள்
இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை அதிகளவில் பெய்ததன் காரணமாக அனைத்து குளங்களும் நிரம்பி வழிகின்றன. நெல்லை மாவட்டத்தில் உள்ள கூந்தன்குளம், வடக்கு கழுவூர், நெல்லை நயினார்குளம், பாளையங்கோட்டை வேய்ந்தான்குளம், தென்காசி மாவட்டம் வாகைகுளம் மற்றும் தூத்துக்குடி மாவட்டம் செட்டிகுளம் உள்ளிட்ட குளங்களில் உள்நாட்டு பறவைகள் ஆயிரக்கணக்கில் கூடுகட்டி இனப்பெருக்கத்தில் ஈடுபட்டு உள்ளன.
இதுதவிர வெளிநாட்டு பறவைகளும் கூடுகட்டி வாழ்ந்து வருகின்றன.
62 குளங்களில்...
இந்த நிலையில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள 62 குளங்களில் பறவைகளை கணக்கெடுக்க தன்னார்வலர்கள் சிறு சிறு குழுக்களாக பிரிந்து செயல்பட்டு வருகின்றனர்.
கொரோனா வழிகாட்டு முறைகளை பின்பற்றி ஒருங்கிணைப்பாளர் மதிவாணன் தலைமையில் இந்த பணியில் ஈடுபட்டு உள்ளனர். இதில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் ஏற்கனவே தங்களுடைய விவரங்களை பதிவு செய்து இருந்தனர். அவர்களுக்கு இணையவழியில் பறவைகள் கணக்கெடுப்பு குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
இனப்பெருக்க காலம்
இதைத்தொடர்ந்து தற்போது நடைபெறும் கணக்கெடுக்கும் பணியை மாவட்ட வன அலுவலர் முருகன் தொடங்கி வைத்தார். இதில் பறவைகள் எத்தனை உள்ளன? என்ன வகையான இனங்கள்? இதன் இனப்பெருக்க காலம் எவ்வளவு? என்பன உள்ளிட்ட விவரங்கள் சேகரிக்கப்படுகிறது. இந்த பணி இன்று (சனிக்கிழமை) மாலை வரை நடைபெறுகிறது. இன்று கூந்தன்குளத்தில் பறவைகள் கணக்கெடுப்பு பணியை கலெக்டர் விஷ்ணு ஆய்வு செய்கிறார். பின்னர் தாமிரபரணியில் உள்ள 62 குளங்களில் பறவைகளின் எண்ணிக்கை, வெளிநாட்டு பறவைகள் இனம் குறித்த தகவல்களை வெளியிடுவார் என தெரிகிறது.