பா.ஜ.க. பிரமுகர் வெடிகுண்டு வீசி கொலை

வில்லியனூரில் இரவு வேளையில் பா.ஜ.க. பிரமுகர் வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்டார. முகமூடி அணிந்து வந்த கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.
பா.ஜ.க. பிரமுகர் வெடிகுண்டு வீசி கொலை
Published on

வில்லியனூர்

வில்லியனூரில் இரவு வேளையில் பா.ஜ.க. பிரமுகர் வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்டார. முகமூடி அணிந்து வந்த கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.

பா.ஜ.க. பிரமுகர்

புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் அருகே உள்ள கணுவாப்பேட்டையை சேர்ந்தவர் ரங்கசாமி. ஆசிரியர். அவரது மகன் செந்தில்குமார் (வயது 46). பா.ஜ.க. பிரமுகரான இவர், மங்கலம் தொகுதி பொறுப்பாளராக இருந்தார். புதுவை உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்தின் தீவிர ஆதரவாளர் ஆவார்.

இன்று இரவு மங்கலம் தொகுதி அரியூரில் நடந்த பா.ஜ.க. கூட்டத்தில் கலந்து கொண்டு வில்லியனூர் கண்ணகி அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் உள்ள தனியார் பேக்கரி கடையில் டீ குடித்து கொண்டிருந்தார். அப்போது அங்கு 3 மோட்டார் சைக்கிளில் முகமூடி அணிந்தவாறு 9 பேர் கொண்ட கும்பல் வந்தது.

வெடிகுண்டு வீச்சு

பின்னர் அவர்கள் திடீரென நாட்டு வெடிகுண்டை செந்தில்குமார் மீது வீசினர். அந்த குண்டு செந்தில்குமாரின் அருகில் விழுந்து வெடித்தது. இதனால் சுதாரித்து கொண்ட செந்தில்குமார் அங்கிருந்து தப்பியோட முயன்றார். ஆனால் அதற்குள் அந்த கும்பல் மற்றொரு நாட்டு வெடிகுண்டை தூக்கி வீசியது. அந்த வெடிகுண்டு அவரமேல் விழுந்து பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறியது.

வெடிகுண்டு வீச்சில் நிலைகுலைந்து கீழே சரிந்த அவரை அக்கும்பல் சுற்றி வளைத்து சரமாரியாக அரிவாளால் வெட்டியது. இதில் முகம் சிதைந்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் அவர் துடிதுடித்து இறந்தார். அவர் இறந்ததை உறுதி செய்த கும்பல் கொலைவெறியுடன் அங்கிருந்து மோட்டார் சைக்கிள்களில் மின்னல் வேகத்தில் தப்பி சென்றது.

அமைச்சர் நமச்சிவாயம்

இந்த கொலை சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் சட்டம்-ஒழுங்கு சீனியர் போலீஸ் சூப்பிரண்டு நாரா.சைதன்யா, போலீஸ் சூப்பிரண்டு ரவிக்குமார், வில்லியனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலைய்யன், சப்-இன்ஸ்பெக்டர் வேலு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

பின்னர் செந்தில்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்ததும் அமைச்சர் நமச்சிவாயமும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார். அவர் கொலை குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யும்படி போலீசாருக்கு அறிவுறுத்தினார்.

தனிப்படைகள் அமைப்பு

கொலையாளிகளை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பேக்கரி கடையில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

கொலை சம்பவம் நடந்த சிறிது நேரத்தில் செந்தில்குமாரின் ஆதரவாளர்கள், உறவினர்கள் அங்கு திரண்டனர். அவர்கள் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யும்படி கோஷங்களை எழுப்பினர்.

தொடர்ந்து அந்த பகுதியில் பதற்றம் நிலவுவதால் பாதுகாப்பு பணிக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com