பூத்துக்குலுங்கும் காபி செடிகள்

வால்பாறை பகுதியில் பெய்த கோடை மழையால், காபி செடிகள் பூத்துக்குலுங்குகின்றன. இதனால் விளைச்சல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக விவசாயிகள் கூறினார்கள்.
பூத்துக்குலுங்கும் காபி செடிகள்
Published on

வால்பாறை,

கோவை மாவட்டம் வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான தேயிலை தோட்டங்கள் காணப்படுகின்றன. இது தவிர சுமார் 4 ஆயிரத்து 500 ஏக்கர் பரப்பளவில் காபி பயிரிடப்பட்டு உள்ளது. ஆரம்ப காலத்தில் வால்பாறையில் உள்ள எஸ்டேட் பகுதிகளில் காபி மட்டுமே பயிரிடப்பட்டு இருந்தது.

ஆனால் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே காபி பயிர் பலன் தருகிறது என்பதால், ஆண்டு முழுவதும் பலன் தரும் தேயிலை பயிரிட விவசாயிகள் ஆர்வம் காட்டினர். இதனால் காபி பயிரிடும் விவசாயிகள் எண்ணிக்கை குறைந்துவிட்டது.

வால்பாறை பகுதிகளில் அரபிக்கா, ரோபஸ்டா ஆகிய 2 வகை காபி செடிகள் பயிரிடப்பட்டு உள்ளது. தற்போது காபி செடிகளில் பூக்கள் பூத்துக்குலுங்க தொடங்கிவிட்டன. ஆண்டுதோறும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் காபி பழங்கள் பறிக்கும் பணி முடிந்தவுடன் பிப்ரவரி மாதத்தின் இறுதி வாரத்தில் காபி செடிகளில் பூக்களின் அரும்புகள் தோன்றும்.

அதன்பின்னர் பரவலாக கோடை மழை கிடைத்தவுடன் அரும்புகள் மொட்டுவிட்டு பூவாக மலர தொடங்கும். அதன்படி தற்போது கடந்த 2 வாரங்களாக வால்பாறையில் பரவலாக கோடை மழை பெய்தது. இதனால் காபி செடிகள் பூக்க தொடங்கி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் காரணமாக காபி தோட்டங்கள் வெள்ளை நிற பூக்களுடன் பூந்தோட்டம் போல காட்சியளிக்கின்றன. இதுகுறித்து காபி விவசாயிகள் கூறியதாவது:-

தற்போது பூத்துள்ள செடிகளில் தொடர்ந்து காய்கள் உண்டாகி அறுவடைக்கு தயாராகும். வருகிற நவம்பர் மாத்தில் ரோபஸ்டா வகை செடிகளில் காபி பழங்களை அறுவடை செய்யலாம். டிசம்பர் மாத்தில் அரபிக்கா வகை செடிகளில் காபி பழங்களை அறுவடை செய்ய முடியும். இந்த சீசன் முடிந்தவுடன் மீண்டும் பிப்ரவரி மாத்தில் காபி செடிகள் பூக்க தொடங்கிவிடும்.

தற்போது ஒரு கிலோ காபி கொட்டை ரூ.150 முதல் ரூ.200 வரை விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ காபி தூள் ரூ.500-க்கு விற்கப்படுகிறது. கோடை மழை சரியான நேரத்தில் கிடைத்து உள்ளதால், இந்த ஆண்டு காபி விளைச்சல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com