செந்தில்பாலாஜிக்கு எதிரான வழக்கு: சென்னை அமர்வுக்கு மாற்றி மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

அமைச்சர் பதவியில் இருந்து செந்தில்பாலாஜியை நீக்க உத்தரவிடக்கோரிய வழக்கை சென்னை அமர்வுக்கு மாற்றி மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
செந்தில்பாலாஜிக்கு எதிரான வழக்கு: சென்னை அமர்வுக்கு மாற்றி மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
Published on

மதுரை,

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் தாலுகா, வானதிராயன் பட்டியை சேர்ந்த வக்கீல் சண்முக சுந்தரம், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

கடந்த 2021-ம் ஆண்டில் நடந்த தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. சார்பில் கரூர் தெகுதியில் செந்தில் பாலாஜி போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் அவர் மின்சாரத்துறை, கலால் மற்றும் ஆயத்தீர்வைத்துறைகளின் அமைச்சராக இருந்து வந்தார். கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக அவர் இருந்தபோது, பண மோசடியில் ஈடுபட்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் அடிப்படையில் அவருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

பின்னர் அவரை அதிகாரிகள் கைது செய்தனர். இதையடுத்து அவரிடம் இருந்த மின்துறையும், கலால் துறையும் மற்ற 2 அமைச்சர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது. தற்போது அவர் துறைகள் எதுவும் இல்லாத அமைச்சராக நீடித்து வருகிறார். இது அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது. எனவே செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் நீடிக்க தடை விதித்தும், அந்த பதவியில் இருந்து அவரை நீக்கியும் உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறியுள்ளார். இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கவுரி ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இதே கோரிக்கையுடன் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் சென்னை ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ளன. எனவே இந்த வழக்கையும் சென்னை ஐகோர்ட்டு முதன்மை அமர்வுக்கு மாற்றி உத்தரவிடுகிறோம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com