சென்னிமலை அருகே அரசு டவுன் பஸ்சை சிறைபிடித்த பொதுமக்கள்

சென்னிமலை அருகே அரசு டவுன் பஸ்சை பொதுமக்கள் சிறைபிடித்தனர்.
சென்னிமலை அருகே அரசு டவுன் பஸ்சை சிறைபிடித்த பொதுமக்கள்
Published on

சென்னிமலை

சென்னிமலை அருகே அரசு டவுன் பஸ்சை பொதுமக்கள் சிறைபிடித்தனர்.

டவுன் பஸ்

சென்னிமலையில் இருந்து ஊத்துக்குளிக்கு தினமும் காலை 8.30 மணிக்கு சி-6 என்ற வழித்தட எண் கொண்ட அரசு டவுன் பஸ் சென்று வருகிறது. எல்லக்காடு, சிறுக்களஞ்சி வழியாக ஊத்துக்குளிக்கு காலை 9.50 மணிக்கு சென்றடையும். பின்னர் அங்கிருந்து காலை 10 மணிக்கு புறப்பட்டு 11.20 மணிக்கு சென்னிமலைக்கு வந்து சேரும்.

கொரோனா ஊரடங்கு காரணமாக வசூல் குறைந்ததால் கடந்த சில மாதங்களாக ஊத்துக்குளியில் இருந்து காலை 10 மணிக்கு புறப்பட்டு சென்னிமலைக்கு வரவேண்டிய அந்த டவுன் பஸ் இயக்கப்படாமல் இருந்தது. தற்போது ஊரடங்கு தளர்வு செய்யப்பட்ட பிறகும் அந்த பஸ் வராமல் இருந்தது.

சிறைபிடிப்பு

இதுகுறித்து போக்குவரத்து துறை அதிகாரிகளிடம் அந்த பஸ்சை தொடர்ந்து இயக்க கோரி பொதுமக்கள் பலமுறை முறையிட்டதாக தெரிகிறது. ஆனால் தொடர்ந்து அந்த பஸ் சென்னிமலைக்கு வராமலேயே இருந்தது.

இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் நேற்று காலை 8.30 மணிக்கு சென்னிமலையில் இருந்து ஊத்துக்குளிக்கு புறப்பட்டு சென்று கொண்டிருந்த அந்த பஸ்சை சென்னிமலை-ஊத்துக்குளி ரோட்டில் உள்ள எல்லக்காடு என்ற இடத்தில் சிறை பிடித்தனர்.

இதையடுத்து காங்கேயம் போக்குவரத்து கழக அதிகாரிகள் பஸ்சை சிறைபிடித்த பொதுமக்களிடம் செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார்கள். அப்போது நாளை மறுநாள் முதல் (வெள்ளிக்கிழமை) சம்பந்தப்பட்ட பஸ் காலை 10 மணிக்கு ஊத்துக்குளியிலிருந்து புறப்பட்டு சென்னிமலை வரை இயக்கப்படும் என்று உறுதி அளித்தார்கள்.

இதைத்தொடர்ந்து சிறைபிடிக்கப்பட்ட பஸ்சை சுமார் 1 மணிநேரம் கழித்து பொதுமக்கள் விடுவித்தார்கள்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com