

திருவெறும்பூர்:
கோவிலுக்கு சென்றனர்
கரூர் மாவட்டம் கொசூர் அருகே உள்ள சந்தையூரை சேர்ந்தவர் மகாலிங்கம். வக்கீல். இவர் நேற்று குருபெயர்ச்சியையொட்டி குடும்பத்துடன் கரூரில் இருந்து தஞ்சாவூர் மாவட்டம் ஆலங்குடியில் உள்ள ஆபத்சகாயேஸ்வரர் கோவிலுக்கு காரில் சென்று கொண்டிருந்தார். காரை மகாலிங்கம் ஓட்டினார். அந்த காரில் மகாலிங்கம், அவரது மனைவி பழனியம்மாள்(வயது 42), மகள் சாதனா(14), மகன் எஸ்வந்த்(12) மற்றும் அவரது உறவினர்களான விசுவநாதன்(43), தமிழ்ச்செல்வி(38), கிருத்திகா(25) ஆகியோர் இருந்தனர்.
இதில் பழனியம்மாளும் வக்கீல் ஆவார். மேலும் இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். சாதனா, தரகம்பட்டியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
2 பேர் சாவு
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே துவாக்குடியில் உள்ள சுங்கச்சாவடியை கடந்து சென்றபோது காரின் மீது பின்னால் திருச்சியில் இருந்து தஞ்சையை நோக்கி வந்த அரசு பஸ் மோதியது. இதில் காரின் பின்பகுதி சேதமடைந்தது.
இதில் படுகாயமடைந்த பழனியம்மாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற 6 பேரும் படுகாயமடைந்தனர். இது பற்றி தகவல் அறிந்த துவாக்குடி போலீசார் அங்கு சென்று படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே சாதனா பரிதாபமாக இறந்தார்.
போலீசார் விசாரணை
இதையடுத்து மற்ற 5 பேரும் திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். இறந்தவர்களின் உடல்களை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்த கொசூர் பகுதி மக்கள், விபத்து நடந்த இடத்தில் குவிந்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கார் மீது பஸ் மோதியதில் தாய்-மகள் உயிரிழந்த சம்பவம் கொசூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.