

ராயபுரம்,
பஸ் கண்ணாடி உடைப்பு
சென்னை எழும்பூரில் இருந்து திருவொற்றியூர் நோக்கி நேற்று முன்தினம் இரவு அரசு பஸ் தடம் எண்.28 சென்று கொண்டிருந்தது. பஸ்சில் திருவொற்றியூரைச் சேர்ந்த கண்டக்டர் முருகன் பயணிகளுக்கு டிக்கெட் கொடுத்துக்கொண்டு இருந்தார்.
கண்ணன் ரவுண்டானா என்ற இடம் அருகே சென்றபோது பஸ்சின் பின்பக்க படிக்கட்டில் நின்றபடி 2 வாலிபர்கள் பயணம் செய்தனர். கண்டக்டர் முருகன் அவர்களை உள்ளே வரும்படி கூறியதால் இருதரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனையடுத்து பஸ்சை நிறுத்தி, 2 வாலிபர்களையும் முருகன் கீழே இறக்கி விட்டார். ஆத்திரம் அடைந்த இருவரும் பஸ் மீது கல்வீசி விட்டு தப்பி சென்றுவிட்டனர். இதில் பஸ்சின் பின்பக்க கண்ணாடி உடைந்தது.
சம்பவம் தொடர்பாக கண்டக்டர் முருகன் கொடுத்த புகாரின்பேரில் வண்ணாரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய வாலிபர்களை தேடி வருகின்றனர்.
* வியாசர்பாடியில் கூலி பணத்தை பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் ரவி (வயது 24) என்பவரை பிளேடால் வெட்டிய பெயிண்டர் விஜய் என்கிற ராக்கியை (20) போலீசார் கைது செய்தனர்.
* செங்குன்றம் அருகே குடும்பத்தகராறில் இளங்கோ (30) என்பவரை அரிவாளால் வெட்டிய விஜயகுமார் (24), தினகரன் (24) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
* அம்பத்தூரில் 10ம் வகுப்பு மாணவியை மானபங்கம் செய்ய முயன்ற பார்த்திபன் (20) கைது செய்யப்பட்டார்.
* அம்பத்தூர் எஸ்டேட்டில் தனியார் கம்பெனியில் வேலை பார்த்தபோது மின்சாரம் தாக்கி செல்வராஜ் (60) உயிரிழந்தார்.
* ராயபுரத்தில் தனியார் நிறுவன பெண் ஊழியர் ஜனனி (20) என்பவரிடம் தகராறு செய்த திருவல்லிக்கேணி பாலாஜி (38) கைது செய்யப்பட்டார்.
* காசிமேடு சிங்காரவேலர் நகர் புதுமனைகுப்பத்தில் உள்ள மாநகராட்சி பள்ளி மாணவர்களை கட்டாயப்படுத்தி தடுப்பூசி போடப்பட்டதாக போலீசில் பெற்றோர் புகார் செய்துள்ளனர்.
* ஓட்டேரியில் கஞ்சா விற்ற பிரபு (21) கைது செய்யப்பட்டார். 1 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
* கொருக்குப்பேட்டை, ஆர்.கே.நகரில் புகையிலைப்பொருட்கள் விற்பனை செய்ததாக வடிவேலு (40), குமார் (52) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இருவரும் அண்ணன், தம்பிகள் ஆவர்.