

திருச்சி, மார்ச்.29-
திருச்சி மாவட்டத்தில் 60 சதவீதத்துக்கு மேற்பட்ட பஸ்கள் இயங்கவில்லை. மேலும் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தால் ரூ.150 கோடி வங்கி பரிவர்த்தனை பாதிக்கப்படடது.
60 சதவீத பஸ்கள் இயங்கவில்லை
மத்திய அரசுக்கு எதிராக அனைத்து தொழிற்சங்கங்கள் 2 நாட்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி முதல் நாளான நேற்று நடத்திய வேலைநிறுத்த போராட்டம் காரணமாக திருச்சி மாவட்டத்தில் 60 சதவீதத்துக்கு மேற்பட்ட பஸ்கள் இயங்காததால் மாணவ- மாணவிகள், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதில் காலைநேரத்தில் பெரும்பாலான பஸ்கள் இயங்காததால், வேலைக்கு செல்வோர் மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ-மாணவிகள் பஸ் நிறுத்தங்களில் நீண்ட நேரம் காத்திருந்தனர். வெகுநேரமாகியும் பஸ்கள் வராததால் சிலர் வீடு திரும்பினர்.
சிலர் ஆட்டோ மற்றும் வாடகை கார் மூலமும், சில மாணவர்கள் நடந்து செல்லும் சூழ்நிலை ஏற்பட்டது. திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் நேற்று காலை திருச்சி புறநகர் பகுதிக்கு வேலைக்கு செல்வோர் மற்றும் வியாபாரிகள் பலர் பஸ்சுக்காக காத்து இருந்தனர். ஆனால் குறைவான அரசு பஸ்கள் இயங்கியதால் தனியார் பஸ்சில் கூட்டம் நிரம்பி வழிந்தன. திருச்சி மாவட்டத்தில் 11 பணிமனைகள் உள்ளன இதில் 60 சதவீதத்திற்கு மேல் பஸ்கள் இயங்கவில்லை.
ரூ.150 கோடி பரிவர்த்தனை பாதிப்பு
மேலும் மாவட்டத்தில் பெரும்பாலான வங்கிகளில் அதிகாரிகள் மட்டுமே வந்திருந்தனர். ஊழியர்கள் பெரும்பாலானோர் வரவில்லை. இதையொட்டி பல்வேறு வங்கிகளில் பணிபுரியும் அதிகாரிகள் நேற்று காலை அந்தந்த வங்கி முன்பு திரண்டனர். அங்கு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது கோஷங்கள் எழுப்பப்பட்டன. அதிகாரிகள் பணியில் இல்லாததால் முக்கிய பண பரிவர்த்தனைகள் பாதிக்கப்பட்டுள்ளது. அதாவது, மாவட்டம் முழுவதும் சுமார் ரூ.150 கோடிக்கு மேல் பண பரிவர்த்தனை, காசோலை பரிமாற்ற சேவை பாதிக்கப்பட்டுள்ளது. ஏ.டி.எம். மையங்களில் பணம் முழுமையாக நிரப்பி வைக்கப்பட்டுள்ளதால், ஏ.டி.எம். மையங்களில் பணம் எடுப்பதில் பாதிப்பு ஏற்படவில்லை. மேலும் வங்கி கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் பெரும்பாலானவர்கள் நெட்பேங்கிங் வசதி மூலம் பண பரிமாற்றம் செய்து கொள்வதால் பாதிப்பு இல்லை.