

உலகின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்று வால்வோ. சுவீடன் நாட்டை சேர்ந்த இந்த நிறுவனத்தின் கார்களுக்கு உலக அளவில் பெரும் வரவேற்பு உள்ளது. இந்தியாவிலும் வால்வோ சொகுசு கார்களுக்கு வாகன பிரியர்கள் மத்தியில் தனி மவுசு உள்ளது. சுவீடனில் உள்ள கோதென்பர்க் நகரில் தலைமையிடமாக கொண்டு இயங்கும் இந்த கார் நிறுவனம், எஸ்.யூ.வி ரக கார்களை பெல்ஜியம், தெற்கு கரோலினா மற்றும் சீனா ஆகிய நாடுகளில் உற்பத்தி செய்கிறது.
கார் விற்பனை சந்தையில் நிலவும் வர்த்தக போட்டியால் ஏற்பட்டுள்ள நிச்சயமற்ற தன்மையால் இந்த நிறுவனம் கடுமையான சவால்களை சந்தித்து வருகிறது. எனவே, செலவை குறைக்கும் திட்டமாக 3 ஆயிரம் பேரை பணிநீக்கம் செய்ய உள்ளதாக வால்வோ கார் நிறுவன தலைவர் ஹகன் சாமுவேல்சன் அறிவித்துள்ளார். சீனாவில் விற்பனை கடுமையாக சரிவு மற்றும் அமெரிக்காவில் பெரிய அளவில் தள்ளுபடி அறிவித்தது ஆகியவை நிறுவனத்தின் வருவாயில் பெரும் வீழ்ச்சியை கொடுத்துள்ளது. எனவே செலவீன கட்டுப்பாட்டு நடவடிக்கையாக இத்தகைய முடிவை வால்வோ நிறுவனம் எடுத்து இருக்கலாம் சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.