

புதுடெல்லி
இந்தியா கடந்த செப்டம்பரில் உள்நாட்டு விமானப்போக்குவரத்தில் 8.3 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது.
உலக அளவில் விமானப்போக்குவரத்து துறையானது சரிவில் இருந்து மெல்ல மீண்டு வருகிறது. இதில், உலகளாவிய அடிப்படையில் கடந்த செப்டம்பரில், விமான பயணிகளின் எண்ணிக்கை 0.5 சதவீதம் என்ற அளவில் சரிவை சந்தித்துள்ளது. இதனை ஆர்.பி.கே. என்ற அளவீடு கொண்டு கணக்கிடுகின்றனர். ஆர்.பி.கே. என்பது பயணிகளின் எண்ணிக்கையை குறிப்பிடும் அளவீடு ஆகும்.
இதில், கடந்த ஆகஸ்டுடன் (0.8 சதவீதம்) ஒப்பிடும்போது, நிலைமை சற்று மேம்பட்டுள்ளது. இதன்படி, விமானப்போக்குவரத்து துறையில், உலக அளவில் ஆஸ்திரேலியா, சீனா மற்றும் பிரேசில் போன்ற நாடுகள் சரிவில் இருந்து மெல்ல மீண்டு வந்துள்ளன. அந்நாடுகளில் அதிக அளவில் பயணிகளின் போக்குவரத்து நடந்துள்ளது. அமெரிக்கா மற்றும் ஜப்பான் நாடுகள் தங்களை தக்க வைத்து கொண்டுள்ளன.
ஆனால், கடந்த செப்டம்பரில், இந்தியாவின் உள்நாட்டு விமானப்போக்குவரத்து கடுமையான அளவில் பாதிக்கப்பட்டு உள்ளது. இதுபற்றி சர்வதேச விமானப்போக்குவரத்து சங்கம் (ஐ.ஏ.டி.ஏ) வெளியிட்ட செய்தியில், ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் இது 8.3 சதவீதம் சரிந்துள்ளது என தெரிவித்து உள்ளது.
விமான எரிபொருள் விலை உயர்வு, பொருளாதார மந்தநிலை உள்ளிட்ட காரணங்களால் இந்தியாவில் உள்நாட்டு விமானப்போக்குவரத்தில் பெரும் தாக்கம் ஏற்பட்டுள்ளது.