

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால், இந்தியாவின் எண்ணெய் மற்றும் எரிவாயு இறக்குமதிக்கான செலவு அக்டோபர் மாதத்தில் 60 சதவீதம் அதிகரித்துள்ளது.ம்இந்தியாவின் எண்ணெய் மற்றும் எரிவாயு இறக்குமதிக்கான நிகர செலவு கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் 10 பில்லியன் டாலராக இருந்தது. இது நடப்பாண்டு அக்டோபர் மாதத்தில் 16 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.
மேற்கு ஆசியாவில் நிலவி வரும் போர் பதற்றம் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக எரிபொருள் போக்குவரத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. பிரெண்ட் கச்சா எண்ணெயின் சராசரி விலை கடந்த ஆண்டு அக்டோபரில் ஒரு பேரல் 64.75 டாலராக இருந்தது. இது நடப்பாண்டு அக்டோபரில் 124.77 டாலராக உயர்ந்துள்ளது.இதன் காரணமாக இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதிக்கான செலவு மட்டும் 19.5 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு இதே மாதத்தில் இந்த செலவு 10.4 பில்லியன் டாலராக இருந்தது.
இதற்கிடையே, சமையல் கியாஸ் (எல்பிஜி) பயன்பாடும் அக்டோபர் மாதத்தில் 12.3 சதவீதம் சரிந்துள்ளது. நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான காலகட்டத்தில் எல்பிஜி பயன்பாடு 15.1 சதவீதம் குறைந்துள்ளது.அதே நேரத்தில், அக்டோபர் மாதத்தில் டீசல் பயன்பாடு 12 சதவீதமும், பெட்ரோல் பயன்பாடு 3.5 சதவீதமும் அதிகரித்துள்ளது.இந்தியாவின் எண்ணெய் மற்றும் எரிவாயு இறக்குமதிக்கான செலவு நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான 7 மாதங்களில் 97.7 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இது 70.3 பில்லியன் டாலராக இருந்தது. இந்தியாவின் கச்சா எண்ணெய் தேவையில் சுமார் 89 சதவீதம் இறக்குமதி மூலமாகவே பூர்த்தி செய்யப்படுவதால், சர்வதேச சந்தையில் ஏற்படும் விலை மாற்றங்கள் நாட்டின் பொருளாதாரத்தில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.