

மும்பை,
இந்திய பங்குச் சந்தையில் மிகச் சிறப்பான அறிமுகத்தைப் பெற்ற ஜியோ பிளாட்பார்ம்ஸ், சந்தை மூலதனத்தின் அடிப்படையில் உலகின் 6-வது மதிப்புமிக்க தொலைத்தொடர்பு நிறுவனமாக உருவெடுத்துள்ளது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்டின் துணை நிறுவனமான ஜியோ பிளாட்பார்ம்ஸ் லிமிடெட் நிறுவனம், ரூ.30,213 கோடி நிதி திரட்ட இலக்கு நிர்ணயித்து பொது பங்குகளை வெளியிட்டது. பங்குகளை வாங்குவதற்கு முதலீட்டாளர்கள் காட்டிய ஆர்வம் காரணமாக, முதல் 100 நிமிடங்களிலேயே முதலீட்டுக்கான இலக்கு எட்டப்பட்டது.
கடந்த 21-ந்தேதி தொடங்கி 23-ந்தேதி முடிவடைந்த இந்தப் பங்கு வெளியீட்டில், ஒதுக்கப்பட்ட பங்குகளைவிட 22.19 மடங்கு அதிகமாக விண்ணப்பங்கள் குவிந்தன. அதாவது, சுமார் ரூ.7.5 லட்சம் கோடி மதிப்பிலான விண்ணப்பங்கள் வரப்பெற்றன. பின்னர் விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு தகுதிவாய்ந்த முதலீட்டாளர்களுக்கு பங்குகள் ஒதுக்கப்பட்டன.
ஒட்டுமொத்த இந்தியப் பங்குச்சந்தையே ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த இந்த பிரமாண்ட பொதுப்பங்கு வெளியீட்டைத் தொடர்ந்து, மும்பை மற்றும் தேசிய பங்குச்சந்தைகளில் இந்த நிறுவனத்தின் பங்குகள் நேற்று முறைப்படி பட்டியலிடப்பட்டன.
ஜியோ பிளாட்பார்ம்ஸ் நிறுவனத்தின் பொதுப்பங்கு ஒன்றின் ஆரம்ப விலை ரூ.1,119 ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், சந்தையில் பட்டியலான முதல் நாளிலேயே முதலீட்டாளர்களின் பேராதரவால், அந்த விலையைவிட சுமார் 21.36 சதவீதம் வரை உயர்ந்து, ரூ.1,358 என்ற அசுர விலையில் வர்த்தகம் தொடங்கியது.
இந்திய பங்குச்சந்தைகள் நேற்று கடுமையான சரிவைச் சந்தித்து தள்ளாடிய நிலையிலும், அதற்கு நேர்மாறாக ஜியோ பிளாட்பார்ம்ஸ் பங்குகள் அசுர வேகத்தில் ஏறுமுகமாக வர்த்தகமாகி சாதனை படைத்தன. இந்த அதிரடி விலை உயர்வு மூலம், ஜியோவின் பொதுப்பங்கில் முதலீடு செய்தவர்களுக்கு ஒரே நாளில் சுமார் 21.36 சதவீத லாபம் கிடைத்துள்ளது. ஆரம்பத்தில் ரூ.10.3 லட்சம் கோடி சந்தை மதிப்பீட்டில் பட்டியலிடப்பட்ட ஜியோ நிறுவனம், இந்த விலை உயர்வுக்குப் பிறகு ஒரே நாளில் ரூ.12.5 லட்சம் கோடி என்ற இமாலய சந்தை மதிப்பீட்டை எட்டியுள்ளது. அதாவது பங்குச்சந்தையில் களம் இறங்கிய முதல் நாளிலேயே இதன் மதிப்பு ரூ.2.2 லட்சம் கோடி உயர்ந்துள்ளது.
இதன் மூலம், ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.11.8 லட்சம் கோடி சந்தை மதிப்பீட்டைக் காட்டிலும் கூடுதலாக உயர்ந்து, இந்தியாவின் ஆகப்பெரிய முதன்மை தொலைதொடர்பு நிறுவனமாக ஜியோ பிளாட்பார்ம்ஸ் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
பங்குச்சந்தையில் முறைப்படி பட்டியலிடப்படும் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமத்தைச் சேர்ந்த 12-வது நிறுவனம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய வர்த்தக உலகின் முதல் இரண்டு இடங்களையும் முகேஷ் அம்பானியின் நிறுவனங்களே பிடித்துள்ளன. தற்போதைய நிலவரப்படி, சுமார் ரூ.15.8 லட்சம் கோடி சந்தை மதிப்பீட்டுடன் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் இந்தியப் பங்குச்சந்தையில் முதலிடத்தில் உள்ளது. ஜியோ பிளாட்பார்ம்ஸ் 2-ம் இடத்தைப் பிடித்துள்ளது.
இந்திய பங்குச் சந்தையில் மிகச் சிறப்பான அறிமுகத்தைப் பெற்று, சுமார் 12.5 லட்சம் கோடி ரூபாய் சந்தை மதிப்பீட்டை எட்டியதன்மூலம், சந்தை மூலதனத்தின் அடிப்படையில் உலகின் 6-வது மதிப்புமிக்க தொலைத்தொடர்பு நிறுவனமாக உருவெடுத்துள்ளது. ஆசிய அளவில், சைனா மொபைல் நிறுவனத்திற்கு (China Mobile) அடுத்தபடியாக, இரண்டாவது மதிப்புமிக்க தொலைத்தொடர்பு நிறுவனம் என்ற சிறப்பை பெற்றுள்ளது.
இந்திய பங்குச்சந்தைகள் நேற்று கடுமையான சரிவைச் சந்தித்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் 'சென்செக்ஸ்' 353 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 73 ஆயிரத்து 246 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி' 51 புள்ளிகள் சரிந்து 22 ஆயிரத்து 698 புள்ளிகளாகக் குறைந்தது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது மற்றும் வெளிநாட்டு முதலீடுகள் வெளியேறுவது சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், இன்போசிஸ், டி.சி.எஸ். உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களின் பங்குகள் கடும் சரிவைச் சந்தித்தன.