

புதுடெல்லி
தேசிய பங்கு சந்தையில் நிப்டி குறியீடு 8.58 சதவீத வாராந்திர உச்சம் பெற்றுள்ளதுடன், முதலீட்டாளர்களுக்கு ரூ.28 லட்சம் கோடி வரவு சேர்ந்துள்ளது.
தீபாவளி பண்டிகை நாளை மறுநாள் கொண்டாடப்பட உள்ள நிலையில், அதற்கு முன்னரே பங்கு சந்தைகளில் முதலீடு செய்தவர்கள் அதனை கொண்டாடுவதற்கு ஏற்ற வகையிலான மகிழ்ச்சியான சூழல் ஏற்பட்டு உள்ளது.
மும்பை மற்றும் தேசிய பங்கு சந்தைகளில், முறையே சென்செக்ஸ் மற்றும் நிப்டி குறியீடு இந்த வாரம் அதிகபட்ச உச்ச நிலையை அடைந்துள்ளது.
வெளிநாட்டு நிறுவனங்களின் முதலீடு, கச்சா எண்ணெய் விலை குறைவு மற்றும் 2027-ம் நிதியாண்டுக்கான 2-ம் காலாண்டில் கார்ப்பரேட் நிறுவனங்களின் வருவாய் போன்றவற்றால், தொடர்ந்து பங்கு சந்தைகள் ஏற்றத்துடனேயே நீடித்து வருகிறது.
இதனால், இந்த வாரத்தில் சென்செக்ஸ் மற்றும் நிப்டி குறியீடு சமீப ஆண்டுகளில் இல்லாத வகையில் அதிகரித்து காணப்படுகிறது. இதில் நிப்டி குறியீடு 8.58 சதவீதம் அதிகரித்து உள்ளது. நடப்பு ஆண்டு மார்ச் 2-ந்தேதிக்கு பின்னர் முதன்முறையாக 1,978 புள்ளிகள் அதிகரித்து, 25 ஆயிரம் புள்ளிகள் என்ற அளவில் இருந்தது.
இதன்படி, 6 ஆண்டுகளில் இல்லாத வகையில், வாராந்திர சதவீத அடிப்படையில் லாப நிலை ஏற்பட்டுள்ளது. இதேபோன்று சென்செக்ஸ் குறியீடும், இந்த வாரத்தில் 9 சதவீதம் வரை உயர்ந்து 81 ஆயிரம் புள்ளிகளுடன் முடிவடைந்துள்ளது.
இதனால், இந்த வாரத்தில், முதலீட்டாளர்களுக்கு ஏறக்குறைய ரூ.28 லட்சம் கோடி அளவுக்கு சொத்து சேர்ந்துள்ளது. மும்பை பங்கு சந்தை பட்டியலிட்ட நிறுவனங்களின் ஒருங்கிணைந்த சந்தை முதலீடும் ரூ.475.34 லட்சம் கோடியில் இருந்து ரூ.503 லட்சம் கோடியாக அதிகரித்து உள்ளது.