வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதம் 5.25-ல் இருந்து 5.5 சதவீதமாக உயர்வு

தற்போதைய ரெப்போ ரேட் விகிதம் 5.25 சதவீதத்தில் இருந்து 5.50 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது
ரெப்போ வட்டி
Published on: 

வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதம் 'ரெப்போ ரேட்' என்று அழைக்கப்படுகிறது. இதன் அடிப்படையில்தான் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் வீடு, வாகன கடன்களுக்கான வட்டியை வங்கிகள் தீர்மானிக்கின்றன. 2 மாதங்களுக்கு ஒருதடவை ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை குழு கூடி, ரெப்போ ரேட்டை மாற்றியமைப்பது பற்றி ஆலோசனை நடத்துவது வழக்கம். அதுபோல், இம்முறைக்கான இக்கூட்டம் இன்று மும்பையில் நடைபெற்றது.

வட்டி விகிதம் உயர்வு

இந்தக் கூட்டத்தில் ரெப்போ ரெட் விகிதத்தை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போதைய ரெப்போ ரேட் விகிதம் 5.25 சதவீதத்தில் இருந்து 5.50 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் ரெப்போ வட்டி விகிதம் உயர்த்தப்படுவது இதுவே முதல் முறையாகும்.

கச்சா எண்ணெய் விலை உயர்வு

மேற்கு ஆசிய பதற்றம் காரணமாக பணவீக்கம் அதிகரித்து வருகிறது. கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருகிறது. பருவமழையும் நிச்சயமற்ற நிலையில் இருக்கிறது. இத்தகைய சூழலில் ரிசர்வ் வங்கி ரெப்போ ரேட் விகிதத்தை உயர்த்தியுள்ளது.ரெப்போ வட்டி உயர்வு முடிவைத் தொடர்ந்து, மாறுபடும் வட்டி விகிதத்தில் வீட்டுக் கடன் பெற்றவர்களின் கடன் வட்டி விகிதத்தை சம்பந்தப்பட்ட வங்கிகள் உயர்த்தினால், அதன் தாக்கத்தை அவர்கள் எதிர்கொள்ள நேரிடும்.

வங்கிகள் இந்த வட்டி உயர்வை வெவ்வேறு வகைகளில் வாடிக்கையாளர்களுக்கு மாற்றக்கூடும். சிலருக்கு மாதாந்திர தவணை அதிகரிக்கலாம். மற்றவர்களுக்கு இ.எம்.ஐ தொகையில் மாற்றம் இல்லாமல், கடனை திருப்பிச் செலுத்தும் காலம் நீட்டிக்கப்படலாம். இதன் உண்மையான தாக்கம், எந்த வங்கியில் கடன் பெற்றுள்ளனர், கடனின் வகை, தற்போது செலுத்தும் வட்டி விகிதம் மற்றும் மீதமுள்ள கடன் காலம் ஆகியவற்றைப் பொறுத்து மாறுபடும். வீடு வாங்க திட்டமிடுபவர்களுக்கும் கடன் செலவு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com