

மும்பை
மும்பை மற்றும் தேசிய பங்கு சந்தைகள் இன்று காலை வர்த்தகம் தொடங்கியபோது சரிவுடன் காணப்பட்டன.
நாட்டில் பங்கு சந்தைகளில் இன்று காலை வழக்கம்போல் வர்த்தகம் தொடங்கியது. எனினும், 7 வார காலம் காணப்பட்ட சரிவு நிலை இன்றும் நீடித்தது. இதன்படி மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் குறியீடு 934.10 புள்ளிகள் (1.26 சதவீதம்) சரிந்து 72,961 புள்ளிகளாக இருந்தது.
சென்செக்ஸ் குறியீட்டில் இருந்த அனைத்து 30 பங்குகளும் சரிவையே சுட்டி காட்டின. இவற்றில் பஜாஜ் பைனான்ஸ், கோடக் மகிந்திரா வங்கி, எச்.டி.எப்.சி. வங்கி, பஜாஜ் பின்செர்வ், இந்துஸ்தான் யுனிலீவர், மகிந்திரா அண்ட் மகிந்திரா, லார்சன் அண்ட் டியூப்ரோ மற்றும் பாரத் எலக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட நிறுவன பங்குகள் பெரும் சரிவை சந்தித்துள்ளன.
இதேபோன்று தேசிய பங்கு சந்தையில் நிப்டி குறியீடும் 1.16 சதவீதம் சரிந்து 22,871.40 புள்ளிகளாக இருந்தது. இதனால், இரண்டு பங்கு சந்தைகளிலும் சரிவு நிலை காணப்பட்டது. கச்சா எண்ணெய் விலை உயர்வே, இந்த சரிவுக்கு முக்கிய காரணியாக கூறப்படுகிறது.
ஏனெனில், உலகளாவிய எண்ணெய்க்கான அளவுகோலாக காணப்படும் பிரென்ட் கச்சா எண்ணெய், பீப்பாய் ஒன்றிற்கு 2.27 சதவீதம் அளவுக்கு விலை அதிகரித்து உள்ளது.
உலக அளவில் எண்ணெய் இறக்குமதியில் 3-வது பெரிய நாடாக உள்ள இந்தியாவுக்கு, இந்த விலை அதிகரிப்பு கவலை அளிக்கும் விசயம் ஆகும். ஏனென்றால், பிரென்ட் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இறக்குமதி எண்ணெய்க்கான விலையும் நிர்ணயிக்கப்பட்டு விடும்.
இதேபோன்று, மோதலை தீர்ப்பதற்கான மற்றும் ஹார்மூஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பதற்கான ஈரானின் வேண்டுகோளை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் நிராகரித்ததும், கூட முக்கிய காரணியாக உள்ளது. இதனால், உலக சந்தைகளில் முக்கிய பங்கு வகிக்கும் காரணியாக எண்ணெய் விலை அமைந்து, அது இந்திய பங்கு சந்தைகளிலும் எதிரொலித்து உள்ளது.