பரஸ்பர நிதி நிறுவனங்களிடம் உரிமை கோரப்படாத ஈவுத்தொகை 15.7 சதவீதம் உயர்வு

உரிமை கோரப்படாத மீட்புத்தொகை ரூ.1,122 கோடியாக சரிந்துள்ளது.
பரஸ்பர நிதி நிறுவனங்களிடம் உரிமை கோரப்படாத ஈவுத்தொகை 15.7 சதவீதம் உயர்வு
Published on

ஈவுத்தொகை உயர்வு

கடந்த நிதியாண்டு இறுதியில், பரஸ்பர நிதி நிறுவனங்களிடம் உள்ள உரிமை கோரப்படாத லாப ஈவுத்தொகை 15.7 சத வீதம் அதிகரித்துள்ளது. பங்குச்சந்தை ஒழுங்குமுறை அமைப்பான 'செபி' கடந்த நிதி யாண்டுக்கான வருடாந்திர அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கடந்த 2024-2025 நிதியாண்டின் இறுதியில், பரஸ்பர நிதி நிறுவனங்களிடம் இருந்த உரிமை கோரப்படாத லாப ஈவுத்தொகை ரூ.2 ஆயிரத்து 324 கோடியாக இருந்தது. கடந்த நிதியாண்டின் இறுதியில், அத்தொகை ரூ.365 கோடி அதிகரித்து, ரூ.2 ஆயிரத்து 689 கோடியாக உயர்ந்துள்ளது. இது, 15.7 சதவீத உயர்வாகும். அதே சமயத்தில், உரிமை கோரப்படாத மீட்புத்தொகை கடந்த 2024-2025 நிதியாண்டில் ரூ.1,128 கோடியாக இருந்தது. கடந்த நிதியாண்டில் இது 0.5 சதவீதம் குறைந்து, ரூ.1,122 கோடியாக சரிந்துள்ளது.

'செபி' நடவடிக்கை

பரஸ்பர நிதி நிறுவனங்களில் உரிமை கோரப்படாத ஈவுத் தொகை மற்றும் மீட்புத்தொகையை சேர்த்து பார்க்கும்போது, 2024-2025 நிதியாண்டில் இருந்த ரூ.3 ஆயிரத்து 452 கோடியில் இருந்து கடந்த நிதியாண்டின் இறுதியில் ரூ.3 ஆயிரத்து 811 கோடியாக அதிகரித்துள்ளது.

கோரப்படாத நிலையில் உள்ள நிதிச் சொத்துகளின் அளவைக் குறைப்பதற்கும், முதலீட்டாளர்கள் மற்றும் அவர்களது வாரிசுதாரர்கள் தங்கள் முதலீடுகளை எளிதாக அணுகுவதற்கும் 'செபி' தீவிர நடவடிக்கைகளை எடுத்து வரும் சூழலில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com