மழைக்காலத்தில் பட்டுப்புடவை பராமரிப்பு

ஷூ அல்லது எலக்ட்ரானிக் பொருட்கள் வாங்கும்போது அதனுடன் சிலிக்கா ஜெல் பாக்கெட்டுகள் கிடைக்கும். அவற்றை தூக்கி எறிவதற்குப் பதில் புடவைகள் வைக்கும் அலமாரியில் வைக்கலாம். அவை அலமாரியில் உள்ள அதிகப்படியான ஈரப்பதத்தை உறிஞ்சும் தன்மை கொண்டது.
மழைக்காலத்தில் பட்டுப்புடவை பராமரிப்பு
Published on

ழை மற்றும் குளிர் காலத்தில் எல்லா இடங்களும் ஈரப்பதமாகவே இருக்கும். இதனால் எளிதில் பூஞ்சைகள் மற்றும் பாசிகள் படர்ந்துவிடும். இவை துணிகள் மற்றும் மரச்சாமான்களையும் விட்டுவைப்பதில்லை. குறிப்பாக பருத்தி மற்றும் பட்டுத்துணிகள் இவற்றால் அதிகமாக பாதிக்கப்படும். பெண்களின் நேசத்துக்குரிய பட்டுப்புடவைகளை இதில் இருந்து எவ்வாறு பாதுகாக்கலாம் என்பதை இங்கே தெரிந்துகொள்வோம்.

பிளாஸ்டிக் கவர்களைத் தவிர்க்கவும்:

பலரும் பட்டுப்புடவைகளைப் பிளாஸ்டிக் கவர்களில் சுற்றி பாதுகாப்பார்கள். பிளாஸ்டிக் கவர்கள் ஈரப்பதத்தை ஈர்க்கும். அதற்குள் வைக்கும் துணிகள் அந்த ஈரத்தை உறிஞ்சிக்கொள்ளும். அதுமட்டுமில்லாமல் காற்றில் உள்ள ஈரப்பதம் ஜரிகையை ஆக்சிஜனேற்றம் செய்து கருக்கச் செய்யும். எனவே, பட்டுப் புடவை போன்ற ஜரிகை, கற்கள் நிறைந்த ஆடைகளை மென்மையான பருத்தி துணியில் சுற்றி வைப்பதே நல்லது.

புரோட்டீன் ஷாம்பு அல்லது ஒயிட் வினிகர்:

மழைக்காலத்தில், விசேஷங்களுக்கு பட்டுப்புடவை உடுத்திச் சென்றால் வீட்டுக்கு வந்ததும் அவற்றை உடனடியாக குளிர்ந்த நீரில் துவைப்பது சிறந்தது. ஒரு பக்கெட்டில் முக்கால் பங்கு தண்ணீர் நிரப்பி அதில் 1 டேபிள் ஸ்பூன் ஒயிட் வினிகர் அல்லது புரோட்டீன் ஷாம்புவைச் சேர்த்து நன்றாகக் கலக்க வேண்டும். இதில், பட்டுப் புடவையை உட்புறமாகக் திருப்பி, மூழ்க வைக்க வேண்டும்.

3 முதல் 5 நிமிடங்கள் வரை மட்டுமே புடவை தண்ணீரில் இருக்க வேண்டும். பின்னர் அதை மெதுவாக வெளியே எடுத்து, மற்றொரு பக்கெட்டில் குளிர்ந்த நீரை நிரப்பி அதில் நன்றாக அலசி எடுக்க வேண்டும். புடவையை முறுக்கிப் பிழியாமல் தண்ணீரை உதறி நிழலில் உலர்த்த வேண்டும்.

பட்டுப்புடவையை உலர்த்துவதற்காக டிரையர் பயன்படுத்த வேண்டாம். டிரையரில் உள்ள வெப்பம் புடவையை சேதப்படுத்துவதுடன், அதன் நிறத்தையும் மங்கச் செய்யும்.

ஹேங்கரை பயன்படுத்துங்கள்:

பட்டுப்புடவையை மடித்து வைப்பதைவிட, ஹேங்கரில் மாட்டுவது சிறந்தது. மெட்டல் ஹேங்கரில் உள்ள உலோகக்கலவை, துணியுடன் வினைபுரிந்து சேலையை நிரந்தரமாக சேதப்படுத்தும். எனவே மரத்தாலான ஹேங்கர்களை உபயோகியுங்கள். புடவையை மட்டுமின்றி பிளவுஸ்களையும் ஹேங்கரில் மாட்டி வைப்பது அவசியம்.

சிலிக்கா ஜெல் பயன்படுத்தலாம்:

ஷூ அல்லது எலக்ட்ரானிக் பொருட்கள் வாங்கும்போது அதனுடன் சிலிக்கா ஜெல் பாக்கெட்டுகள் கிடைக்கும். அவற்றை தூக்கி எறிவதற்குப் பதில் புடவைகள் வைக்கும் அலமாரியில் வைக்கலாம். அவை அலமாரியில் உள்ள அதிகப்படியான ஈரப்பதத்தை உறிஞ்சும் தன்மை கொண்டது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com