லாரி எரிப்பு சம்பவம் தொடர்பாக அ.தி.மு.க. பிரமுகர்கள் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

கரூரில் லாரி எரிப்பு சம்பவம் தொடர்பாக அ.தி.மு.க. பிரமுகர்கள் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கரூர்
கரூர்
Published on

கரூர்,

லாரிக்கு தீ வைப்பு

கரூர்-திருச்சி சாலையில் பவித்திரத்தில் இருந்து எம்சாண்ட் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று புலியூர் நோக்கி சென்று கொண்டு இருந்தது. அந்த லாரியை மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்த அன்பழகன் (வயது 29) என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். லாரியில் அந்த நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பணிபுரியும் கரூர் மாவட்டம் மாயனூரை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (32) என்பவரும் உடன் வந்துள்ளார்.

கோடங்கிபட்டி அருகே லாரி வந்தபோது லாரியை வழிமறித்த சிலர் அன்பழகனையும், கிருஷ்ணமூர்த்தியையும் கீழே இறக்கி தாக்கிவிட்டு லாரிக்கு தீ வைத்துவிட்டு தப்பி சென்றனர். இந்நிலையில் காயமடைந்த 2 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டனர்.

தாக்கினர்

இதுகுறித்து கிருஷ்ணமூர்த்தி தாந்தோணிமலை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த மனுவில், கடந்த 9-ந்தேதி நான் பணிபுரியும் நிறுவனத்தின் லாரி எம்சாண்ட் ஏற்றிக்கொண்டு பவித்திரத்திலிருந்து புலியூர் நோக்கி சென்று கொண்டு இருந்தது. லாரியை அன்பழகன் என்பவர் ஓட்டினார். கோடங்கிபட்டி பிரிவு அருகே வந்த போது அடையாளம் தெரியாத 3 பேர் லாரியை மறித்தனர். மேலும் 2 கார்களில் அங்கு வந்த பலர் என்னையும் டிரைவரையும், லாரியில் இருந்து கீழே இறக்கி மிரட்டி அடித்து தாக்கினர்.

7 பிரிவுகளின் கீழ் வழக்கு

மேலும், அ.தி.மு.க.வை சேர்ந்த தானேஷ் என்கிற முத்துக்குமார் என்பவருக்கும், தான் பணிபுரியும் நிறுவன உரிமையாளருக்கு உள்ள வியாபார பிரச்சினையில் அவரும் மற்றும் அ.தி.மு.க.வை சேர்ந்த சிலரும் லாரியை பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கூறியிருந்தார்.

அந்த புகாரின்பேரில், தானேஷ் என்கிற முத்துக்குமார், திருவிகா, மதுசுதன், கமலக்கண்ணன், நெடுஞ்செழியன் உள்ளிட்ட பலர் மீது 7 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். லாரி எரிப்பு சம்பவத்தில் அ.தி.மு.க. முக்கிய பிரமுகர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com