கடற்கரையில் சுற்றித்திரியும் கால்நடைகள்

காரைக்கால் கடற்கரையில் சுற்றித்திரியும் கால்நடைகளால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
கடற்கரையில் சுற்றித்திரியும் கால்நடைகள்
Published on

காரைக்கால்

காரைக்கால் கடற்கரையில் சுற்றித்திரியும் கால்நடைகளால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

கடற்கரை

காரைக்காலில் முக்கிய சாலைகளில் மாடுகள் கூட்டம், கூட்டமாக சுற்றித்திரிகின்றன. இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. இதை தடுக்க காரைக்கால் மாவட்டத்தில் கால்நடைகளை சாலையில் திரியவிடக்கூடாது, மீறினால் கால்நடைகள் பறிமுதல் செய்யப்பட்டு, உரிமையாளர்களுக்கு அபராதம் மற்றும் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி ஆணையர் எச்சரிக்கை விடுத்தார்.

இருந்தபோதிலும் இந்த உத்தரவு காற்றில் பறக்க விட்டதுபோல் காரைக்காலில் போக்குவரத்து அதிகமுள்ள முக்கிய சாலைகளில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் கால்நடைகளான மாடுகள், நாய்கள், கூட்டம் கூட்டமாக சுற்றத்திரிகின்றன.

பொதுமக்கள் அவதி

குறிப்பாக காரைக்கால் கடற்கரை சாலை மற்றும் கடற்கரை மணல் பகுதியில் கட்டுக்கடங்காமல் மாடுகள் சுற்றித்திரிகின்றன. காரைக்காலில் முக்கிய சுற்றுலா தலங்களில் கடற்கரை தான் முக்கியமானது ஆகும். இந்த மணல் பகுதியில் தான், மாலை நேரத்தில் காரைக்கால், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட சுற்று வட்டார பகுதி மக்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் பொழுதை கழித்து வருகின்றனர்.

ஆனால் சமீப காலமாக மாடுகள் கடற்கரை மணல் பகுதியில் வலம் வருவதால் பொதுமக்கள் சுதந்திரமாக நடமாட முடியாமல் தவித்து வருகின்றனர். இரவு முழுவதும் அங்கேயே மாடுகள் படுத்துக்கொள்வதால் மறுநாள் அதன் சாணம் பொதுமக்களை நடமாட விடாமல் செய்து விடுகிறது. கால்நடைகளின் கழிவுகளால் சிறிது நேரம் கூட அமர முடியாமல் பொதுமக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாக நேரிடுகிறது.

விபத்து அபாயம்

இது போதாத குறைக்கு இரவு நேரங்களில் சாலைகளில் கட்டுக்கடங்காமல் சுற்றித்திரியும் மாடுகளால் விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. சில நேரங்களில் உயிரிழப்புகளும் தவிர்க்க முடியாததாகி விடுகிறது.

எனவே சாலை மற்றும் கடற்கரை மணல் பரப்பில் திரியும் கால்நடைகளை மாவட்ட நிர்வாகம் நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து மூலம் கட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேணடும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com