மத்திய அரசின் 'ஹர் கர் திரங்கா' இயக்கத்தை நாங்கள் எதிர்க்கவில்லை-டி.கே.சிவக்குமார் பேட்டி

மத்திய அரசின் ஹர் கர் திரங்கா இயக்கத்தை நாங்கள் எதிர்க்கவில்லை என்று டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.
மத்திய அரசின் 'ஹர் கர் திரங்கா' இயக்கத்தை நாங்கள் எதிர்க்கவில்லை-டி.கே.சிவக்குமார் பேட்டி
Published on

பெங்களூரு:

கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பெட்டி அளிக்கையில் கூறியதாவது:-

முட்டாள்கள் அல்ல

சுதந்திரம் ஒரு கட்சிக்கு சேர்ந்தது அல்ல. சுதந்திரம் வாங்கி கொடுத்த வரலாறு காங்கிரசுக்கு உண்டு. இதை நாடு முழுவதும் உள்ள இளைஞர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று காங்கிரசாருக்கு கூறியுள்ளேன். அரசு சார்பில் சுதந்திர தினம் கொண்டாட கூடாது என்று சொல்லும் அளவுக்கு நாங்கள் முட்டாள்கள் அல்ல. இது நாட்டின் நிகழ்ச்சி. தேசிய கொடியை ஒரு சரக்காக விற்பனை செய்ய வேண்டாம் என்று தான் சொல்கிறோம்.

மத்திய அரசு ஹர் கர் திரங்கா இயக்கத்தை நடத்துகிறது. அதை நாங்கள் எதிர்க்கவில்லை. தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தும் எண்ணம் அவர்களுக்கு வந்ததற்கு நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். எங்களுக்கு முதலில் தேசியம் தான் முக்கியம். பா.ஜனதாவை சேர்ந்த ஒரு தலைவர் தேசிய கொடியை அகற்றிவிட்டு காவி கொடி ஏற்றுவதாக கூறினார்.

சுதந்திர தின ஊர்வலம்

அவர்களுக்கு தேசபக்தி வரட்டும். ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் தேசிய கொடியை ஏற்றியதாக வந்த தகவலை கேட்டு மகிழ்ச்சி அடைந்தோம். காங்கிரஸ் சார்பில் சுதந்திர தின ஊர்வலத்தை 15-ந் தேதி பெங்களூருவில் நடத்த ஏற்பாடு செய்துள்ளோம். அதில் பிரியங்கா காந்தி கலந்து கொள்வதாக இருந்தது. ஆனால் அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொள்வார்கள்.

இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com