சென்னை விமான நிலையத்தில் ரூ.38½ லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் கொழும்பு, மலேசியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.38 லட்சத்து 40 ஆயிரம் மதிப்புள்ள தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், இதுதொடர்பாக 5 பேரிடம் விசாரித்து வருகின்றனர்.
சென்னை விமான நிலையத்தில் ரூ.38½ லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்
Published on

ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு வெளிநாட்டில் இருந்து வரும் விமானங்களில் தங்கம் கடத்தப்பட்டு வருவதாக விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து விமான நிலையத்தில் சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர்.

அப்போது கொழும்பில் இருந்து சென்னைக்கு விமானம் வந்தது. அதில் வந்த திருச்சியை சேர்ந்த ஆரிபா ராஜா(வயது 26), மதினா(43) ஆகியோர் மீது சந்தேகம் அடைந்த சுங்க இலாகா அதிகாரிகள், 2 பேரையும் நிறுத்தி விசாரித்தனர்.

அதிகாரிகளிடம் அவர்கள், முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் இருவரது உடைமைகளையும் சோதனை செய்தனர். அதில் எதுவும் இல்லாததால் அவர்களை தனியறைக்கு அழைத்து சென்று சோதனை செய்தனர்.

அதில் 2 பேரும் தங்களது உள்ளாடைகளுக்குள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். 2 பேரிடம் இருந்தும் ரூ.7 லட்சத்து 81 ஆயிரம் மதிப்புள்ள 238 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் கைப்பற்றினார்கள்.

இதேபோல் மலேசியாவில் இருந்து சென்னை வந்த விமானத்தில் வந்த சென்னையை சேர்ந்த முகமது யாசின்(33), பர்ஜனா(25), முகமது ரபி(23) ஆகியோரை சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அதில் 3 பேரும் உள்ளாடைக்குள் மறைத்து வைத்து கடத்தி வந்த ரூ.30 லட்சத்து 59 ஆயிரம் மதிப்புள்ள 931 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சென்னை விமான நிலையத்தில் சுங்க இலாகா அதிகாரிகள் நடத்திய சோதனையில் 5 பேரிடம் இருந்து ரூ.38 லட்சத்து 40 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 169 கிராம் தங்கத்தை கைப்பற்றினர்.

மேலும் அவர்கள் அந்த தங்கத்தை யாருக்காக மலேசியா, கொழும்பில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்தனர்?. இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார்? என பிடிபட்ட 5 பேரிடமும் விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com