சென்னை விமான நிலையத்தில் ரூ.58 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் கொழும்பு, மலேசியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.58 லட்சத்து 55 ஆயிரம் மதிப்புள்ள தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சென்னை விமான நிலையத்தில் ரூ.58 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்
Published on

ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு வெளிநாட்டில் இருந்து வரும் விமானத்தில் தங்கம் கடத்தப்பட்டு வருவதாக விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர்கள், விமான நிலையத்தில் தீவிரமாக கண்காணித்தனர்.

அப்போது மலேசியாவில் இருந்து சென்னைக்கு விமானம் வந்தது. அதில் சென்னையை சேர்ந்த சாகுல்அமீது (வயது 35), திருச்சியை சேர்ந்த முகமது யூசுப் (47) ஆகியோர் வந்தனர். இவர்கள் மீது சந்தேகம் அடைந்த சுங்க இலாகா அதிகாரிகள் இருவரையும் பிடித்து விசாரித்தனர்.

அதிகாரிகளிடம் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசினர். இதனால் இருவரது உடைமைகளையும் சோதனை செய்தனர். அதில் உணவு பொருட்கள் தயாரிக்கும் கருவி இருந்தது. சந்தேகத்தின்பேரில் அந்த கருவியை பிரித்து பார்த்தனர்.

அதில் உருளை வடிவில் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். மேலும் 2 தங்க பிரேஸ்லெட்டுகளும் மறைத்து வைத்து இருப்பது தெரிந்தது.

இதையடுத்து 2 பேரிடம் இருந்தும் ரூ.33 லட்சத்து 93 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 30 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இதேபோல் இலங்கை தலைநகர் கொழும்பில் இருந்து விமானம் வந்தது. அதில் வந்த சென்னையை சேர்ந்த 2 பேரை நிறுத்தி சுங்க இலாகா அதிகாரிகள் விசாரித்தனர். அவர்களின் உடைமைகளில் எதுவும் இல்லாததால் 2 பேரையும் தனியறைக்கு அழைத்து சென்று சோதனை செய்தனர்.

அதில் இருவரும் தங்கள் உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். 2 பேரிடம் இருந்தும் ரூ.24 லட்சத்து 62 ஆயிரம் மதிப்புள்ள 745 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

சென்னை விமான நிலையத்தில் ஒரே நாளில் சுங்க இலாகா அதிகாரிகள் நடத்திய சோதனையில் 4 பேரிடம் இருந்து ரூ.58 லட்சத்து 55 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 775 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். இந்த தங்கத்தை இவர்கள் மலேசியா, கொழும்பில் இருந்து சென்னையில் யாருக் காக கடத்தி வந்தனர்? என விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com