வேனில் கடத்திவரப்பட்ட 16 கிலோ தங்க கட்டிகள் பிடிப்பட்டன சென்னை வாலிபர் கைது

இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட 16 கிலோ தங்க கட்டிகளை வேனில் கடத்தி சென்றபோது
வேனில் கடத்திவரப்பட்ட 16 கிலோ தங்க கட்டிகள் பிடிப்பட்டன சென்னை வாலிபர் கைது
Published on

ராமநாதபுரம்,

ரகசிய கண்காணிப்பு

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் கடற்கரை பகுதியில் இருந்து ஒரு காரில் தங்கக்கட்டிகள் கடத்தி செல்லப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து திருச்சி, தூத்துக்குடி, மதுரை ஆகிய பகுதிகளை சேர்ந்த மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் குழுவினர் ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அருகே ஒரு இடத்தில் பதுங்கியிருந்து ரகசியமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக ராமநாதபுரத்தில் இருந்து வந்த வேனை மடக்கி பிடித்து சோதனையிட்டபோது அது கூரியர் சர்வீஸ் வாகனம் என்பது தெரியவந்தது. அந்த வாகனத்தில் சோதனையிட்டபோது தங்கக்கட்டிகள் பதுக்கி வைத்து கடத்திச் செல்வதை அதிகாரிகள் உறுதி செய்து அவற்றை பறிமுதல் செய்தனர்.

பொன்னேரி வாலிபர்

இதுதொடர்பாக அந்த வாகனத்தை ஓட்டிவந்த வாலிபரிடம் விசாரித்தபோது அவர் சென்னை பொன்னேரி பகுதியை சேர்ந்த வேலு என்பவருடைய மகன் சந்தோஷ் (வயது26) என்பது தெரியவந்தது. கைப்பற்றப்பட்ட தங்க கட்டிகளுடன் அதிகாரிகள் சந்தோசை பிடித்து கொண்டுவந்து ராமநாதபுரம் சுங்கத்துறை அலுவலகத்தில் வைத்து விடிய விடிய விசாரணை நடத்தினர்.

விசாரணையில் இந்த தங்கக் கட்டிகள் இலங்கையில் இருந்து கடத்தி கொண்டு வரப்பட்டு மண்டபம் கடற்கரை பகுதியில் இருந்து முக்கிய நபர் ஒருவர், சந்தோசிடம் வழங்கி அவற்றை சென்னையில் கொண்டு சேர்க்குமாறு தெரிவித்தது தெரியவந்தது. இதில் சம்பந்தப்பட்டவர்கள் யார், தங்கக்கட்டிகளை வாங்குபவர்கள் யார் என்ற விவரங்கள் தெரியவில்லை. பறிமுதல் செய்யப்பட்ட தங்க கட்டிகளை சோதனையிட்டபோது 16 கிலோ 32 கிராம் இருந்தது. அவற்றின் மதிப்பு ரூ.4 கோடியே 74 லட்சத்து 22 ஆயிரத்து 656 என்று மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

சிறையில் அடைப்பு

கைது செய்யப்பட்ட சந்தோஷ் மதுரை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிபதி உத்தரவின்பேரில் சிறையில் அடைக்கப்பட்டார்.

ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே கடந்த ஜனவரி மாதம் இதேபோன்று காரில் கடத்தி வரப்பட்ட தங்கக் கட்டிகளை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கடந்த சில நாட்களுக்குமுன் புதுக்கோட்டை அருகே ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் தலைவரின் காரில் இருந்து 12 கிலோ தங்கக் கட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இவ்வாறு ராமநாதபுரம் மாவட்ட கடலோர பகுதி வழியாக இலங்கையில் இருந்து கிலோ கணக்கில் தங்கம் கடத்தி வரப்படுவதும் இங்கிருந்து சென்னை போன்ற ஊர்களுக்கு கடத்திச் செல்லப்படுவதும் தொடர்ந்து நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com