நடிகர் விஜய்யின் “ஜன நாயகன்” முழு படமும் இணையத்தில் கசிந்தது: படக்குழுவினர் அதிர்ச்சி

ஜன நாயகன் திரைப்படத்தின் சில காட்சிகள் இணையத்தில் சட்டவிரோதமாக மர்ம நபர்களால் வெளியிடப்பட்டது.
நடிகர் விஜய்யின் “ஜன நாயகன்” முழு படமும் இணையத்தில் கசிந்தது: படக்குழுவினர் அதிர்ச்சி
Published on

சென்னை,

நடிகரும், த.வெ.க., தலைவருமான விஜய், 'ஜன நாயகன்' என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தை கே.வி.என். புரொடக்ஷன் என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த திரைப்படத்துக்கு தணிக்கை சான்று கேட்டு விண்ணப்பிக்கப்பட்டது. படத்தை பார்த்த தணிக்கை வாரிய குழுவினர், மதம் மற்றும் பாதுகாப்பு படை தொடர்பான காட்சிகள் இடம் பெற்றுள்ளதால், இந்த படத்தை மறுஆய்வு குழு பரிசீலனைக்கு பரிந்துரை செய்தனர்.

நீண்ட போராட்டத்திற்கு பின் 'ஜன நாயகன்' படத்தை மறுதணிக்கை செய்ய தணிக்கை வாரியத்திற்கு படத் தயாரிப்பு நிறுவனம் படத்தை அனுப்பியது. விரைவில் படத்திற்கு சென்சார் சான்றிதழ் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜய்யின் கடைசிப் படமான 'ஜன நாயகன்' பொங்கலுக்கு ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சென்சார் பிரச்சினை காரணமாக நீதிமன்றம் வரை சென்று தள்ளிப்போனது. தமிழ்நாடு சட்டசபை தேர்தல் முடிவடைந்தவுடன் மே இரண்டாவது வாரத்தில் ஜன நாயகன் படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது.

இதனிடையே தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவரும் தவெக தலைவர் விஜய், தனது 'ஜன நாயகன்' படத்திற்கு கூட்டு சேர்ந்து பிரச்சினை ஏற்படுத்துகிறார்கள் என குற்றஞ்சாட்டியிருந்தார்.

இந்நிலையில், நேற்று மாலை ஜன நாயகன் திரைப்படத்தின் சில காட்சிகள் இணையத்தில் சட்டவிரோதமாக மர்ம நபர்களால் வெளியிடப்பட்டது. இன்று அதிகாலை 3 மணிநேரம் கொண்ட முழு படமும் இணையத்தில் வெளியானதாக கூறப்படுகிறது. இதனால் படத் தயாரிப்பு நிறுவனமும், படக்குழுவினரும், ரசிகர்களும் பேரதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளனர்.

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக லீக் செய்துள்ளதாக விஜய் ரசிகர்களும் படத்தின் தயாரிப்பு தரப்பும் கடும் ஆட்சேபம் தெரிவித்துள்ளநிலையில், இணையத்தில் வெளியான ஜன நாயகன் படத்தை நீக்கும் முயற்சியில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com