

சென்னை,
சென்னை எழும்பூரில் உள்ள அரசு கவின் கலைக்கல்லூரியின் 175-வது ஆண்டு விழாவில் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
ஓவியம், சிற்பம், நெசவு போன்ற கலைகளையும் கைத்தொழில்களையும் கற்றுக்கொடுப்பதற்காக 1850-ம் ஆண்டு சென்னை பிராட்வேயில் ஒரு பள்ளியைத் தொங்கினார் கர்னல் அலெக்சாண்டர் ஹண்டர்.
இந்தியாவின் மிக பழமையான கலை நிறுவனங்களில் ஒன்று தான் அரசு கவின் கலைக்கல்லூரி. இது ஓவியம், சிறப்பக்கலை மற்றும் முதுகலை படிப்புகளை வழங்கி வருகிறது.
1928-ல் தேவி பிரசாத் ராய் சவுத்ரி இணை முதல்வராக பொறுப்பேற்றார். 1929- இந்தியாவின் முதல் முதல்வர் என்ற பெருமையை பெற்றார்.
பின்னர் இப்பள்ளியை அரசு தன் பொறுப்பில் எடுத்துக் கொண்டது. காலப்போக்கில் அது ஓவியப் பள்ளி என்று பெயர் பெற்று தற்போது சென்னை எழும்பூர் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் அரசுக் கலைத்தொழில் கல்லூரியாக பெயர் மாற்றம் பெற்றது. தற்போது அரசு கவின்கலைக் கல்லூரி என்று அழைக்கப்படுகிறது.
இந்த கல்லூர் கலை பண்பாட்டுத்துறையின் கீழ் இயங்குகிறது. 175 ஆண்டுகளுக்கு மேலாக கலைத்துறையில் பல ஓவிய கலைஞர்களை,சிற்பிகளை, திரைப்பட முன்னணி கலை இயக்குநர்களை, நடிகர்களை உருவாக்க்கிய கல்லூரி என்றே சொல்லலாம்.
இந்தநிலையில், சென்னை எழும்பூரில் உள்ள அரசு கவின் கலைக் கல்லூரியின் 175-வது ஆண்டு விழா, முன்னாள் மாணவர்கள் சார்பில் நடைபெற்றது. இதில், கலை இயக்குநர் தோட்டாதரணி, நடிகர் சிவகுமார் உள்ளிட்ட முன்னாள் மாணவர்கள் பலரும், முன்னாள் ஆசிரியர்கள் பலரும் கலந்து கொண்டு தங்களது பழையகால நினைவலைகளை பகிர்ந்து கொண்டனர்.
தோட்டா தரணி பேசுகையில்,
அனைவருக்கும் வணக்கம், எந்த பேச்சும் சரியாக வராது எனவே நான் ஆங்கிலத்தில் பேசுகொள்கிறேன். நான் இந்த கல்லூரியில் தான் எனது பயணத்தை தொடங்கினேன். எனது ஆசிரியர்கள் எனக்கு நிறைய கற்றுக்கொடுத்தனர். சற்று சிரமாக இருந்தாலும் வாழ்க்கையில் சிறந்த அனுபவங்களை இந்த கல்லூரி எனக்கு கொடுத்தது. இங்கு வந்ததாலே கல்லூரியின் நினைவுகள்தான் நியாகம் வருகிறது என்று கூறினார்.
நிகழ்ச்சியில் நடிகரும் முன்னாள் மாணவருமான சிவகுமார் பேசியதாவது:-
இந்தியாவில் உள்ள ஓவியக் கல்லூரிகளில் 175-வது ஆண்டு விழா நடைபெறும் ஓவியக் கல்லூரி இதுதான். நான் பிரஷை நம்பி சில காலம்தான் இருந்தேன். ஆனால் இங்கு படித்தவர்கள் அனைவரும் பிரஷை மட்டுமே நம்பி இருந்தவர்கள். 24 வயதில் நடிக்கச் சென்று 40-க்கும் மேற்பட்ட கதாநாயகிகளுடன் டூயட் பாடி விட்டு தற்போது நடிப்பை விடுத்து பேச்சாளராக உள்ளேன்.
நாங்கள் படித்த காலத்தில்தான் உழைப்பாளர் சிலையை வடிவமைத்தனர். என்னுடன் படித்த சக மாணவர்களில் பலர் உயிருடன் இல்லை. என்னுடன் படித்த சக நண்பர்கள் பலர், மதுரையில் உள்ளனர். அங்கு அவர்கள் வீட்டில் தங்கி, மதுரையில் பல இடங்களுக்குச் சென்று ஓவியங்களை வரைந்துள்ளோம்.
நாங்கள் படிக்கும்போது 10 மணி நேரத்திற்கு மேலாக ஓவியத்தை வரைந்தோம். நான் பிறந்த ஊரில் அந்த காலத்தில் பள்ளிக்கூடம் இல்லை; மின்சாரம் இல்லை; கழிப்பறை வசதி கிடையாது. என் 14 வயதில் எம்.ஜி.ஆர். படத்தை வரைந்தேன். 17 வயதில் பத்மினியை வரைந்தேன்.
2006-இல் சூர்யாவுக்கு திருமணம் நடைபெறுவதற்கு முன்பு நடிகை பத்மினியை சந்தித்து, நான் வரைந்த ஓவியத்தை அவருக்கு பரிசளித்தேன். அந்த ஓவியத்தை பார்த்து விட்டு நான் இவ்வளவு அழகாக இருந்தேனா? என பத்மினி வியப்புடன் கேட்டார். பத்மினி இறந்தபோது நான் வரைந்த ஓவியம் அவருடைய உடலுக்கு அருகில் வைக்கப்பட்டிருந்தது. என் சிறு வயதில் நடிகர் ஜெமினி கணேசனை ஓவியமாக வரைந்தேன். பிற்காலத்தில் அவருடன் இணைந்து படங்களில் நடித்தேன்.
1961-இல் அண்ணாசாலையில் உள்ள கடைகளை ஓவியமாக வரைந்தேன். ஸ்ரீரங்கம் கோவிலில் அமர்ந்து கோபுரத்தை வரைந்து கொண்டிருந்தேன். அப்போது ஒருவர் என்னை வெளியேற்றி விட்டார். கோவிலுக்கு வெளியே வந்து ஶ்ரீரங்கம் கோவில் கோபுரத்தை வரைந்து முடித்தேன்.
1963- இல் திருவண்ணாமலை சென்று அங்கு உள்ள கோவில் கோபுரம், தீபம் ஏற்றும் மலை மீது ஏறி 8 மணி நேரம் கோவில் கோபுரங்களை வரைந்தேன்.
1972-இல், திரைப்படத்தில் நடிக்கலாம் என எண்ணி மும்பை சென்றபோது, கேட்வே பகுதியை வரைந்து கொண்டிருந்தோம். அங்கு வந்த காவலர்கள், நாங்கள் அனுமதியில்லாமல் அங்கு வந்து ஓவியம் வரைந்ததாக கூறி, எங்களை கைது செய்ய வந்தனர். பிறகு நாங்கள் வரைந்த ஓவியங்களை காண்பித்தபோது, காவலர்களே எங்களை காபி சாப்பிட அழைத்தனர். பெரியார் படத்தை வரைந்து முன்னாள் முதல்வர் கருணாநிதியிடம் காண்பித்தேன். அப்போது, என் படத்தை எல்லாம் நீ வரையவில்லையா? என்று கேட்டார். உடனே அவருடைய படத்தை வரைந்து காண்பித்தேன் அவர் மிகவும் சந்தோஷம் அடைந்தார்.
என் பிள்ளைகள் சினிமாவில் இருப்பதால் நான் வரைந்த ஓவியத்தை புத்தக வடிவில் அமைத்து கொடுத்து இருக்கிறார்கள். இந்த புத்தகத்தின் விலை 2 ஆயிரம் ரூபாய் மாணவர்கள் உங்களுக்கான 1,000 இன்று ஒரு நாள் புத்தகம் விற்பனை செய்யப்படும். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த விழாவை முன்னாள் மாணவர்கள் இணைந்து ஒன்றிணைந்து முன்னெடுத்தனர். விழாவில் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள், தோட்டாதரணி மற்றும் நடிகர் சிவக்குமார், கல்லூரியின் முதல்வர் புகழேந்தி உள்ளிட்டோர் கல்லூரியின் முன்னாள் மாணவர்களும் ஆசியர்களும் கலந்து கொண்டு தங்களது பசுமையான நினைவலைகளை ஒருவொருக்கொருவர் பகிந்து கொண்டு தங்கள் கல்லூரி பருவத்திற்கே அழைத்து சென்றனர்.