

சீனாவில் மிகக் குறைந்த பட்ஜெட்டில் உருவான அனிமேஷன் திரைப்படமான ‘நியூ லாய்’ (Niu Lai) தற்போது பாக்ஸ் ஆபிஸில் எதிர்பாராத வெற்றியை பதிவு செய்து வருகிறது. வெறும் ரூ.19,000 பட்ஜெட்டில் (Xin Yumeng மற்றும் Sun Lifang) ஆகிய இருவர் இணைந்து இப்படத்தை உருவாக்கியுள்ளனர்.
கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி சீனாவில் வெளியான ‘நியூ லாய்’ திரைப்படத்திற்கு ஆரம்பத்தில் பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை. முதல் 10 நாட்களில் 300-க்கும் குறைவான பார்வையாளர்களே இப்படத்திற்கு டிக்கெட் வாங்கியதாக கூறப்படுகிறது.
படத்தின் காட்சியமைப்பு, கதாபாத்திரங்களின் அனிமேஷன் மற்றும் குரல் பதிவு உள்ளிட்ட அம்சங்கள் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டன. சிலர் இப்படத்தை மிகவும் மோசமானது என்றும், ‘ஏஐ-யை விட மோசம்’ என்றும் விமர்சித்தனர்.
ஆனால், இந்த விமர்சனங்களே படத்திற்கு மிகப்பெரிய விளம்பரமாக மாறின. படத்தின் காட்சிகள் மீம்களாகவும் சமூக வலைதளங்களில் வைரலாகவும் தொடங்கின. “உண்மையிலேயே படம் இவ்வளவு மோசமாக இருக்கிறதா?” என்ற ஆர்வத்தில் பலரும் திரையரங்குகளை நோக்கி படையெடுக்கத் தொடங்கினர்.
இதன் பின்னர் ‘நியூ லாய்’ படத்தின் வசூல் திடீரென அதிகரித்தது. சீன பாக்ஸ் ஆபிஸ் தரவுகளின்படி, இப்படம் தற்போது இந்திய மதிப்பில் சுமார் ரூ.40 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் வெறும் ரூ.19,000 முதலீட்டில் உருவான இப்படம், அதன் பட்ஜெட்டை விட சுமார் 20,000 மடங்கு அதிகமாக வசூலித்துள்ளது.
முன்னதாக குறைந்த பட்ஜெட்டில் வெளியாகி, தனது முதலீட்டை விட 666 மடங்கு அதிகமாக வசூலித்த ‘அப்செஷன்’ திரைப்படம் சாதனை படைத்திருந்தது. தற்போது ‘நியூ லாய்’ திரைப்படம் சுமார் 20,000 மடங்கு வசூல் செய்துள்ளதாக கூறப்படுவதால், குறைந்த பட்ஜெட்டில் அதிக வசூல் என்ற பிரிவில் ‘அப்செஷன்’ படத்தின் சாதனையை முறியடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.