முதல்-அமைச்சர் விஜய் பதவியேற்பு விழாவில் முதல்வரிசையில் 3 பேர் மிஸ்ஸிங்.. - இயக்குநர் சமுத்திரக்கனி

முதல்-அமைச்சராக விஜய் பதவி ஏற்ற விழாவில் குடும்பத்தினர் கலந்து கொள்ளாதது வருத்தம் அளிப்பதாக இயக்குநரும், நடிகருமான சமுத்திரகனி தெரிவித்துள்ளார்.
முதல்-அமைச்சர் விஜய் பதவியேற்பு விழாவில் முதல்வரிசையில் 3 பேர் மிஸ்ஸிங்.. -  இயக்குநர் சமுத்திரக்கனி
Published on

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. விழாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் சண்முகம், இயக்குனர் சமுத்திரக்கனி உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய இயக்குநரும், நடிகருமான சமுத்திரகனி, “எங்கள் துறையில் சேர்ந்த ஒருவருக்கு நம் தமிழக மக்கள் முதலமைச்சர் பதவி கொடுத்திருக்கிறார்கள். அவர்களுக்கு அனுபவமே இல்லை. இப்படி பல கேள்விகள், பல விமர்சனங்கள். நிறைய தெரிந்தவர்கள் என்ன செய்தீர்கள்? எதுவுமே செய்யவில்லை. எதுவுமே தெரியாமல் இருக்கிறவர்கள் ரொம்ப கவனமாக நிறைய நல்லது பண்ணுவார்கள். அனைத்தும் தெரிந்தவர்கள் எதையும் செய்யவில்லை.

13 ஆண்டுகளாக விஜய்யுடன் எனது நட்பு தொடர்கிறது. அன்று புரட்சி என்ற தலைப்பில் நான் சொன்ன கதையை கேட்ட விஜய் பின்னர் இந்த கதையை எடுத்துக் கொள்ளலாம் என்று கூறினார். மக்கள் பணிக்காக செல்வதால் இனி திரைப்படம் நடிக்க மாட்டேன் என்று விஜய் கூறிய போது நான் தான் முதலில் வரவேற்றேன். மக்கள் உங்களை கைவிட மாட்டார்கள் என்று கூறினேன். அது இன்று நடந்து விட்டது. அவரது வருகை சுனாமியை போல் ஆகிவிட்டது. பணம், ஜாதி, மதம், அகங்காரம் கடந்த தேர்தலில் உடைக்கப்பட்டுள்ளது. மக்களை முட்டாள்கள் என்று நினைத்துக் கொண்டிருந்தபோது அவர்கள் ஆகச்சிறந்த அறிவாளி என்று காட்டிவிட்டார்கள்.

காசு கொடுத்தவர்களிடம் வாங்கிவிட்டு கொடுக்காதவர்களிடம் வாக்களித்து விட்டார்கள். முதல்வர் ஸ்டாலின், சீமான் உள்ளிட்டோர் தேர்தலில் தோல்வியுற்றது வருத்தமளித்தது. திருமாவளவன் அவர்களும், அண்ணாமலை அவர்களும் தேர்தலில் நின்று சட்டசபைக்குள் நுழைந்திருக்க வேண்டும் என ஆசைப்பட்டேன்.

பதவியேற்பு விழாவில் மூன்று பேர் இல்லாதது வருத்தம் அளித்தது. அரசியல் நாகரிகத்தை பின்பற்றும் முதல்வர் விஜய் அவர்கள் குடும்பத்தின் மீதும் குடும்ப வாழ்க்கை மீதும் பற்று ஏற்பட அவரது குடும்ப பிரச்சனையை சுமூகமாக முடிக்க வேண்டும். முதல்வர் விஜய் சுயநலத்துடன் ஆசைப்படவில்லை பொதுநலத்துடன் விருப்பப்பட்டிருக்கிறார். மாற்றத்தை விரும்பும் அவர் தன்னிடமிருந்து தொடங்கி இருக்கிறார்.” என்றார்.

தற்போது சமுத்திரக்கனி சூசகமாகக் குறிப்பிட்டது, விஜய்யின் மனைவி சங்கீதா, மகன் ஜேசன் சஞ்சய் மற்றும் மகள் திவ்யா ஆகியோரைத்தான். ஒரு மனிதனின் வாழ்க்கையில் கிடைக்கும் மிகப்பெரிய வெற்றியின்போது, அவனது குடும்பத்தினர் அருகில் இருப்பதுதான் அவருக்கு உண்மையான மகிழ்ச்சியைத் தரும். அந்த வகையில், விஜய் முதல்-அமைச்சராக பொறுப்பேற்கும் நெகிழ்ச்சியான தருணத்தில் அவரது குடும்பத்தினர் அருகில் இல்லாததையே சமுத்திரகனி இவ்வாறு குறிப்பிட்டுப் பேசியதாகத் தெரிகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com