போதைப் பொருளால் அபாய கட்டத்தில் 4 இளம் நடிகர்கள் - மலையாள இயக்குனரின் பேச்சால் பரபரப்பு

கடந்த சில நாட்களாக மலையாள சினிமாவே பரபரப்புக்குள்ளாகி இருக்கிறது.
திருவனந்தபுரம்,
கடந்த சில நாட்களாகவே மலையாள சினிமா பரபரப்புக்குள்ளாகி இருக்கிறது. மலையாள நடிகை வின்சி அலோசியஸ், தான் நடிக்கும் படத்தின் ஹீரோ, தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாகவும், அவர் வாயில் வெள்ளை நிற பவுடர் (போதைப்பொருள்) வைத்திருந்ததாகவும் சமூக வலைதளத்தில் கூறியிருந்தார்.
இந்த சூடு அடங்கும் முன்பே, போதைப்பொருள் தொடர்பாக மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ மீது சர்ச்சை எழுந்தது. இந்த நிலையில் சமூக ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த மலையாள இயக்குனர் சந்திவிலா தினேஷ், "மலையாள சினிமாவில் உள்ள 4 இளம் கதாநாயகர்கள், மரணத்தின் விழிம்பில் இருக்கிறார்கள். தாங்கள் சம்பாதித்திருக்கும் பணத்தை வைத்து அவர்கள் தங்களின் மரணத்தை தள்ளிப்போட்டு வருகிறார்கள். அது நீண்ட காலத்திற்கு உதவாது.
கடைசி காலத்தில் இருக்கும் அவர்களின் பெயரை வெளியிட விரும்பவில்லை. இங்கிருக்கும் ஊடகங்கள் எல்லாம், மம்முட்டி மருத்துவ சிகிச்சை பெறுவதைப் பற்றி பெரிதாக பேசுகின்றன. 70 வயதானவருக்கு உடல் உபாதை வருவது சகஜம். ஆனால் வாழ்க்கையின் கடைசி கட்டத்தில் இருக்கும் அந்த இளம் கதாநாயகர்களைப் பற்றி ஊடகங்கள் கவலைப்படுவதில்லை" என்று கூறியிருக்கிறார். அவரது இந்த பேச்சு மலையாள சினிமாவில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.






