நடிகர் டைகர் ஷெராப் கார் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவத்தில் 4வது நபர் கைது

பாலிவுட் நடிகர் டைகர் ஷெராப் கார் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் தொடர்பாக, மேலும் ஒரு நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
நடிகர் டைகர் ஷெராப் கார் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவத்தில் 4வது நபர் கைது
Published on: 

மும்பை,

ஏற்கெனவே ராஜஸ்தானில் 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது ஹரியானா மாநிலம் சோனிபட்டைச் சேர்ந்த சமீர் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் கார் மீது துப்பாக்கிச்சூடு

பாலிவுட் நடிகர் டைகர் ஷெராப் கார் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் மும்பையில் பரபரப்பை ஏற்படுத்தியது. மும்பையின் ஜூகு பகுதியில் உள்ள புஷ்பா பார்க் அருகே இந்தச் சம்பவம் நடைபெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கால்பந்து விளையாடிவிட்டு காரில் வீடு திரும்பியபோது, அவரது காரைக் குறிவைத்து மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டதாகக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். நடிகரின் பாதுகாப்பு மற்றும் தாக்குதலுக்கான காரணம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

ராஜஸ்தானில் 3 பேர் கைது

துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் தொடர்புடையவர்களைக் கண்டறிய போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். மும்பை மற்றும் ராஜஸ்தான் போலீசார் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையில், ராஜஸ்தான் மாநிலம் கோட்டா ரெயில் நிலையத்தில் புனே-ஜெய்ப்பூர் சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்த 3 சந்தேக நபர்களைப் பிடித்தனர். அவர்கள் நேபாளத்துக்குத் தப்பிச் செல்ல முயன்றதாகக் கூறப்படுகிறது. அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு, சம்பவத்தில் தொடர்புடைய மற்ற நபர்கள் குறித்த தகவல்களும் சேகரிக்கப்பட்டன.

4-வது நபராக சமீர் கைது

இந்த நிலையில், ஹரியானா மாநிலம் சோனிபட்டைச் சேர்ந்த சமீர் என்பவரை போலீசார் கைது செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம், இந்தத் துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. கைது செய்யப்பட்ட சமீருக்கு இந்தச் சம்பவத்தில் என்ன தொடர்பு உள்ளது என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

கேங்ஸ்டர் கும்பலுக்கு தொடர்பா?

இந்தத் துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் பொறுப்பேற்றதாகக் கூறப்படும் சமூக வலைதளப் பதிவுகள் மற்றும் ஒலிப்பதிவுகள் வெளியாகியுள்ளன. சல்மான் கானுடன் பணியாற்றும் நடிகர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையுடன் இந்தத் தாக்குதலுக்குத் தொடர்பு இருக்கலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

X

Daily Thanthi
www.dailythanthi.com