51 ஆண்டுகால “ரஜினிசம்” - சௌந்தர்யா ரஜினிகாந்த் பதிவு

நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜெயிலர் 2’ படம் இன்று உலகளவில் வெளியாகி உள்ளது.
51 ஆண்டுகால “ரஜினிசம்” -  சௌந்தர்யா ரஜினிகாந்த் பதிவு
Published on: 

‘ஜெயிலர் 2’ பிரம்மாண்டமான ‘பிளாக்பஸ்டர்’ திரைப்படம் என்று சௌந்தர்யா ரஜினிகாந்த் பதிவிட்டுள்ளார்.

ரஜினி - நெல்சன் கூட்டணியில் ‘ஜெயிலர் 2’

‘ஜெயிலர்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகமான ‘ஜெயிலர் 2’ இன்று உலகளவில் வெளியானது. மீண்டும் ரஜினிகாந்த் - நெல்சன் திலீப்குமார் கூட்டணி இணைந்துள்ளதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்தது.

இப்படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார் ஆகியோர் சிறப்புத் தோற்றங்களில் நடித்துள்ளனர். மேலும், ரம்யா கிருஷ்ணன், மிதுன் சக்கரவர்த்தி, சந்தானம், சுராஜ் வெஞ்சரமூடு, யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். சுமார் ரூ.350 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. கர்நாடகா, ஐதராபாத், கேரளா உள்ளிட்ட இடங்களில் அதிகாலையிலேயே சிறப்புக் காட்சிகள் திரையிடப்பட்டன.

ரோஹிணி திரையரங்கில் ரஜினி குடும்பத்தினர்

தமிழகத்தில் காலை 9 மணி முதல் ‘ஜெயிலர் 2’ திரைப்படம் திரையிடப்பட்டது. இதையொட்டி, சென்னையில் உள்ள ரோஹிணி திரையரங்கிற்கு ரஜினிகாந்தின் குடும்பத்தினர் வருகை தந்தனர். நடிகர் தனுஷும் அதே திரையரங்கிற்கு வருகை தந்து ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தைப் பார்த்தார். இதனால் ரோஹிணி திரையரங்கில் ரசிகர்களின் உற்சாகம் அதிகரித்தது.

இப்படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் வந்துகொண்டிருப்பதால் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெறும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

சௌந்தர்யா ரஜினிகாந்த் பதிவு

இந்தப் படம் குறித்து ரஜினிகாந்தின் மகளும், இயக்குநருமான சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது சமூக வலைதள பதிவில், “தலைவர் என்பது ஒரு உணர்வு . அது எனக்கு மட்டுமல்ல, அவரை நேசிக்கும் ஒவ்வொருவருக்கும் தான். அதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது; உணர மட்டுமே முடியும். 'ஜெயிலர் 2' ஒரு பிரம்மாண்டமான பிளாக்பஸ்டர் திரைப்படம். எனது அப்பா திரையில் மீண்டும் ஒருமுறை மாஸ் காட்டியுள்ளார். 51 ஆண்டுகளாக எங்களை மகிழ்வித்து வரும் அவரது பயணம், 51 ஆண்டுகால 'ரஜினிசம்'!” எனக் குறிப்பிட்டுள்ளார்.

திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் நெல்சன் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ஆகியோருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com