ஆஸ்கர் விருதிற்காக பரிந்துரைக்கப்பட்ட 6 தமிழ் படங்கள்... என்னென்ன தெரியுமா?

2025-ம் ஆண்டிற்கான ஆஸ்கர் விருதில் போட்டியிடுவதற்கு 6 தமிழ் படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
ஆஸ்கர் விருதிற்காக பரிந்துரைக்கப்பட்ட 6 தமிழ் படங்கள்... என்னென்ன தெரியுமா?
Published on

சென்னை,

சினிமா உலகில் தலைசிறந்த விருது என்பது ஆஸ்கர் விருது ஆகும். இந்த ஆஸ்கர் விருதினை அடைவதே ஒவ்வொரு திரைப்பட கலைஞர்களின் கனவாக உள்ளது. இந்த ஆஸ்கர் விருது ஆண்டுதோறும் சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் என பல்வேறு பிரிவுகளில் வழங்கப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் லாஸ் ஏஞ்சல்ஸில் இந்த விழா நடைபெறுகிறது.

அதன்படி 97-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அடுத்த ஆண்டு மார்ச் 2 ஆம் தேதி (இந்திய தேதிபடி மார்ச் 3) நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் நாடு முழுவதும் 2025 ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதில் போட்டியிடுவதற்காக மொத்தம் 29 திரைப்படங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. அதில் தமிழில் மட்டும் 6 படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

1. மகாராஜா : இயக்குனர் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான படம் 'மகாராஜா'. இப்படம் கடந்த ஜூன் மாதம் 14-ந் தேதி வெளியானது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

2. ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் : 'ஜிகர்தண்டா' திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 8 வருடங்களுக்கு பிறகு வெளியான படம் 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்'. கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

3. வாழை : மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் 'வாழை'. இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். தன்னுடைய வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து 'வாழை' படத்தை மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார்.

4. கொட்டுக்காளி : `கூழாங்கல்' இயக்குனர் பி.எஸ்.வினோத் இயக்கத்தில் சூரி நடித்த திரைப்படம் 'கொட்டுக்காளி'. சிவகார்த்திகேயன் தயாரித்த இத்திரைப்படத்தில் நடிகை அன்னா பென் கதாநாயகியாக நடித்திருந்தார். இப்படத்திற்கு இசையமைப்பாளர் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் இப்படம் 'கிராண்ட் பிரிக்ஸ்' விருது வென்றது குறிப்பிடத்தக்கது.

5. தங்கலான் : பா. ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் சியான் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'தங்கலான்'. இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் பல பரிமாணங்களுடைய கதாபாத்திரத்தில் நடிகர் விக்ரம் நடித்திருக்கிறார்.

6. ஜமா : தமிழ்நாட்டில் உள்ள தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்க்கைமுறை மற்றும் சவால்களை மையமாக வைத்து உருவான படம் 'ஜமா'. பாரி இளவழகன் இந்தப் படத்தை இயக்கி முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். 'ஜமா' என்ற தலைப்பு தெருக்கூத்து நாடகக் கலைஞர்களின் குழுவை குறிப்பதாகும்.

மேலும், தெலுங்கில் 'ஹனுமன் மற்றும் கல்கி 2898 ஏடி' , இந்தியில் 'அனிமல் மற்றும் லாபட்டா லேடீஸ்' , மலையாளத்தில் 'உள்ளொழுக்கு, ஆடுஜீவிதம் மற்றும் ஆட்டம்' உட்பட ஒருசில குறிப்பிட்ட படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com