

‘மகாராஜா’ படத்திற்காக சிறந்த துணை நடிகை பிரிவில் சச்சனா நமிதாஸும், சிறந்த சண்டைப் பயிற்சியாளருக்கான பிரிவில் அனல் அரசும் தேசிய விருதினை வென்றுள்ளனர்
இந்தியாவில் சிறந்த திரைப்படங்கள், சிறந்த நடிகர்கள், நடிகைகளுக்கு 1954-ம் ஆண்டு முதல் 'தேசிய விருதுகள்' வழங்கப்பட்டு வருகிறது. சிறந்த திரைப்பட இயக்குனர், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த ஒலி வடிவமைப்பு, சிறந்த பின்னணி இசை போன்ற பல துறைகளுக்கும் தேசிய விருதுகள் வழங்கப்படுகினறன. இந்திய சினிமாவில் பல்வேறு பிரிவுகளில் சிறந்த கலை பங்களிப்புகளை அங்கீகரிக்கும் வகையில் தேசிய விருதுகள் மிகவும் மதிக்கப்படும் விருதுகளில் ஒன்றாகும்
அந்தவகையில் 72-வது தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் இன்று மாலை அறிவிக்கப்பட்டன. 2024-ம் ஆண்டு திரைப்பட தணிக்கை வாரியத்தால் சான்று அளிக்கப்பட்ட திரைப்படங்கள் விருதுக்கான தேர்வில் பங்கேற்றன
இந்த விருதுப் பட்டியலில் தமிழ் மற்றும் மலையாளத் திரையுலகினர் பல முக்கியப் பிரிவுகளில் விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளனர். இதில், கடந்த 2024ம் ஆண்டு வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்ற ‘மகாராஜா’ திரைப்படத்திற்கு 2 விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தமிழ் சினிமாவுக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாக பார்க்கப்படுகிறது.
சிறந்த துணை நடிகை பிரிவில் சச்சனா நமிதாஸும், சிறந்த சண்டைப் பயிற்சியாளருக்கான பிரிவில் அனல் அரசும் இவ்விருதினை வென்றுள்ளனர். சாச்சனா, இப்படத்தில் விஜய் சேதுபதியின் மகளாக நடித்தவர் ஆவார்.
‘குரங்கு பொம்மை’ படத்தை இயக்கிய நித்திலன் சுவாமிநாதன் ‘மகாராஜா’ படத்தை இயக்கி உள்ளார். கடந்த 2024ம் ஆண்டு ஜூன் 14-ம் தேதி வெளியான இப்படம் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றது. இப்படம் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தொடர்பான விழிப்புணர்வை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.