"நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்" படம் குறித்து விமர்சனம் பகிர்ந்த பிரபல இயக்குனர்!

தனுஷ் இயக்கியுள்ள “நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்” திரைப்படம் நாளை வெளியாக உள்ளது.
சென்னை,
தனுஷ், ராஜ் கிரண் நடித்த 'பவர் பாண்டி' படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து தனுஷ் கடைசியாக இயக்கி, நடித்த 'ராயன்' படம் கடந்த மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தனுஷ் இயக்கத்தில் மூன்றாவது திரைப்படமாக 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' உருவாகியுள்ளது. இந்த படத்தின் மூலம் தனுஷின் சகோதரி மகன் பவிஷ் ஹீரோவாக அறிமுகமாகிறார். அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், மாத்யூ தாமஸ், வெங்கடேஷ் மேனன் உட்பட பலர் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைக்கும் இந்தப் படத்தை வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிக்கிறது.
இந்த படத்தின் முதல் பாடலாக 'கோல்டன் ஸ்பாரோ' பாடல் வெளியானது. நடிகை பிரியங்கா மோகன் கேமியோ ரோலில் நடித்துள்ள இந்த பாடல் நல்ல வரவேற்பை பெற்றது. இப்பாடல் சுமார் 100 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது.
ரொமான்டிக் காதல் கதைக்களத்தில் உருவாகி இருக்கும் இந்த படம் நாளை திரைக்கு வர இருக்கிறது. சமீபத்தில் இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
இந்நிலையில் 'லப்பர் பந்து' பட இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து தனது சமூக வலைதள பக்கத்தில், 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' படம் குறித்து தனது விமர்சனத்தை பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், "நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படம் பார்த்தேன். படம் முழுக்க எனர்ஜியான தருணங்களாகவும், புத்துணர்ச்சியாகவும் இருந்தது. இந்த படத்தில் காதல் மற்றும் நட்பின் சித்தரிப்பு மிகவும் சிறப்பாக காட்டப்பட்டுள்ளது. தனுஷ் சார் சொன்ன மாதிரி 'ஜாலியா வாங்க ஜாலியா போங்க'… திருச்சிற்றம்பலம் வைப்ஸ் கிடைக்கும்" என்று குறிப்பிட்டுள்ளார்.






