

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி காவேரி கூக்குரல் இயக்கத்தின் சார்பில் மரங்கள் நடும் துவக்க விழா நடைபெற்றது. இதில் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர், தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா, சைதாப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் எம்.அருள்பிரகாசம், முதல்-அமைச்சர் விஜய்யின் தாயார் ஷோபா சந்திரசேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த விழாவில் பேசிய ஷோபா சந்திரசேகர், “எனக்கு மேடையில் பேசி பழக்கம் இல்லை. சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் வந்தது மகிழ்ச்சி. நான் 25 வருடமாக ஈசா மூலம் யோகா பயின்று வருகிறேன். இந்த விழா மண், மரத்தை பற்றிய விழா. இவற்றை காப்பாற்ற வந்துள்ளோம். மண் மாதிரியே இருக்கிறேயே என்று பேசுவது எவ்வளவு பெரிய தப்பு. கவிஞர் கலீல் ரகுமான் சொன்னது மாதிரி மரங்கள் எல்லாம் வானத்தை நோக்கி இருக்கும் கவிதை. அவற்றை அழிக்க நமக்கு உரிமை கிடையாது.
மனம் கஷ்டமாக இருக்கும் போது மரத்தை கட்டி அணைத்தால் புது உற்சாகம் பெறும். இதனை நான் அனுபவித்து உள்ளேன். இந்த நேரத்தில் நடிகர் விவேக்கை நினைவுப்படுத்த விரும்புகிறேன். அவர் இருந்திருந்தால் இன்னும் நிறைய செய்து காட்டியிருப்பார். மண்ணை, மரத்தையும் விட்டு கொடுக்காதே என்று சொல்லத்தான் இந்த விழா. சுயமரியாதை உள்ளவர்கள் கலந்து கொள்ளும் விழாவாகும். மக்களை காப்பாற்ற வந்திருக்கும் புதிய அரசு இந்த மண்ணையும், மரத்தையும் காப்பாற்றும். இயற்கையை நேசிக்கும் நண்பன் தான் நமக்கு முதலமைச்சராக வந்துள்ளார்” என்று கூறினார்.