

ஐதராபாத்,
நடிகர் சூர்யா, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள 'ரோலக்ஸ்' திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்க வேண்டுமா? அல்லது வில்லனாக நடிக்க வேண்டுமா? என்று ரசிகர்களிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான திரைப்படம் 'விக்ரம்'. இந்தப் படத்தின் இறுதிக் காட்சியில் ரோலக்ஸ் என்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடிகர் சூர்யா தோன்றியிருந்தார். சில நிமிடங்களே வந்தாலும், அவரது அதிரடியான தோற்றமும் நடிப்பும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றன. இதையடுத்து, ரோலக்ஸ் கதாபாத்திரத்தை மையமாக வைத்து தனிப் படம் உருவாகும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் ஏற்பட்டது. இந்தப் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில், சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள 'சீன்' திரைப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி ஐதராபாத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற சூர்யாவிடம் ரசிகர்கள் 'ரோலக்ஸ்... ரோலக்ஸ்...' என்று உற்சாகமாக குரல் எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த சூர்யா, "ரோலக்ஸ் பற்றி இன்னும் பேசிக்கொண்டுதான் இருக்கிறோம். அதற்கான முயற்சிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. தயவுசெய்து லோகேஷ் கனகராஜை எனக்கு போன் செய்து, என்னை வந்து சந்திக்கச் சொல்லுங்கள்" என்று நகைச்சுவையாகக் குறிப்பிட்டார்.
தொடர்ந்து ரசிகர்களிடம், "அந்தப் படத்தில் நான் ஹீரோவாக நடிக்க வேண்டுமா? அல்லது வில்லனாக நடிக்க வேண்டுமா?" என்று சூர்யா கேள்வி எழுப்பினார். அதற்கு அங்கிருந்த ரசிகர்கள் அனைவரும் 'வில்லன்' என்று உற்சாகமாகக் குரல் கொடுத்தனர். இதைக் கேட்ட சூர்யா, "சரி, வில்லனாக நடிப்பதுதான் சிறந்தது" என்று பதிலளித்தார்.
சூர்யாவின் இந்தப் பேச்சு ரோலக்ஸ் கதாபாத்திரம் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பை மீண்டும் அதிகரித்துள்ளது. இருப்பினும், இப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.