

சென்னை,
இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'டிசி' திரைப்படம் நாளை உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், ரசிகர்களை மேலும் உற்சாகப்படுத்தும் வகையில் படக்குழு புதிய புரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளது.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில், வெற்றி இயக்குநரான லோகேஷ் கனகராஜ் 'தேவதாஸ்' என்ற கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக வாமிகா கபி 'சந்திரா' என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ள நிலையில், நடிகை சஞ்சனா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் இடம்பெற்றுள்ளனர். படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
சமீபத்தில் வெளியான கிளிம்ப்ஸ் மற்றும் டிரெய்லர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றன. இதில் லோகேஷ் கனகராஜ் கேங்ஸ்டராகவும், வாமிகா கபி மற்றும் சஞ்சனா பாலியல் தொழிலாளிகளாகவும் நடித்திருப்பது தெரியவந்தது. பழிவாங்கும் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் டிரெய்லரில் இடம்பெற்ற வன்முறை மற்றும் ரத்தம் தெறிக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டன. மேலும், இந்த டிரெய்லர் கேன்ஸ் திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்டு கவனம் பெற்றது.
மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் (CBFC), 'டிசி' திரைப்படத்திற்கு 'ஏ' (Adults Only) சான்றிதழ் வழங்கியுள்ளது. வன்முறை நிறைந்த ஆக்சன் படமாக உருவாகியுள்ள இந்த திரைப்படம், பெரியவர்களை இலக்காகக் கொண்டு வெளியாக உள்ளது.
இதற்கு முன்பு வெளியான 'பூம் பா டிகா டிகா', 'ராகா ஆப் ரிவெஞ்ச்', 'ஹேங் ஓவர்' ஆகிய பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தன. இந்த நிலையில், படம் நாளை ரிலீஸ் ஆக உள்ள நிலையில், ரிலீஸுக்கு முன்பாக வெளியிடப்பட்டுள்ள புதிய புரோமோ வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, படத்தின் மீது மேலும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.