

சென்னை,
வெளியான இரண்டு வாரங்களிலேயே உலகளவில் ரூ.1,519 கோடி வசூலை ‘ராமாயணா’ திரைப்படம் கடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் இந்தியாவில் மட்டும் ரூ.1,009 கோடியும், வெளிநாடுகளில் ரூ.510 கோடியும் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்தி திரையுலகின் முன்னணி இயக்குநரான நிதேஷ் திவாரி இயக்கத்தில் பிரமாண்ட பொருட்செலவில் உருவான திரைப்படம் ‘ராமாயணா’. இந்திய இதிகாசமான ராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இப்படம், கடந்த 5-ந் தேதி உலகம் முழுவதும் வெளியானது. சுமார் ரூ.2 ஆயிரம் கோடி பட்ஜெட்டில் இரண்டு பாகங்களாக உருவாகி வரும் இப்படத்தின் முதல் பாகம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
இப்படத்தில் ராமர் கதாபாத்திரத்தில் ரன்பீர் கபூரும், சீதை கதாபாத்திரத்தில் சாய் பல்லவியும் நடித்துள்ளனர். ராவணனாக யாஷும், அனுமனாக சன்னி தியோலும் நடித்துள்ளனர். மேலும், ரவி துபே உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் மற்றொரு சிறப்பம்சமாக, இசைப்பணியில் ஆஸ்கார் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் மற்றும் ஹாலிவுட் இசையமைப்பாளர் ஹான்ஸ் ஜிம்மர் இணைந்துள்ளனர். இருவரது கூட்டணியில் உருவான இசை, படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.
பிரமாண்டமான அரங்குகள், நவீன தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட காட்சிகள், நட்சத்திரங்களின் பங்களிப்பு என பல்வேறு அம்சங்களுடன் இப்படம் உருவாகியுள்ளது. இந்திய இதிகாசத்தை சர்வதேச தரத்தில் திரையில் கொண்டு வந்துள்ள இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
இந்த நிலையில், இப்படத்தின் 14 நாள் வசூல் விவரங்கள் வெளியாகி திரையுலகினரின் கவனத்தை ஈர்த்துள்ளன. அதன்படி, வெளியான இரண்டு வாரங்களிலேயே உலகளவில் ரூ.1,519 கோடி வசூலை ‘ராமாயணா’ திரைப்படம் கடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் இந்தியாவில் மட்டும் ரூ.1,009 கோடியும், வெளிநாடுகளில் ரூ.510 கோடியும் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் வெளியான 14 நாட்களில் உலகளவில் ரூ.1,500 கோடி வசூலைக் கடந்த முதல் படம் என்ற சாதனையை இப்படம் படைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளியான முதல் நாளில் இருந்தே வசூலில் கவனம் ஈர்த்து வரும் ‘ராமாயணா’, இரண்டு வாரங்களிலேயே இத்தகைய பிரம்மாண்ட வசூலை எட்டியிருப்பது படக்குழுவினரையும் ரசிகர்களையும் உற்சாகப்படுத்தியுள்ளது. தொடர்ந்து திரையரங்குகளில் வரவேற்பு கிடைத்து வருவதால், இப்படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.