

சென்னை,
வால்மீகி எழுதிய ராமாயணம் கதையை அடிப்படையாக கொண்டு இந்தியாவில் ஏராளமான திரைப்படங்களும், தொலைக்காட்சி தொடர்களும் உருவாக்கப்பட்டுள்ளன. மேடை நாடகம் முதல் 3டி தொழில்நுட்பம் வரை ராமாயண கதை தலைமுறைகளை கடந்து மீண்டும் மீண்டும் சொல்லப்பட்டுக் கொண்டே இருக்கிறது.
அந்த வகையில், மிகப்பெரிய பொருட்செலவில் நிதேஷ் திவாரி இயக்கத்தில் ‘ராமாயணா’ திரைப்படம் உருவாகி வருகிறது. இதில் ராமராக நடிகர் ரன்பீர் கபூரும், சீதையாக நடிகை சாய் பல்லவியும் நடித்துள்ளனர். ராவணன் கதாபாத்திரத்தை கன்னட நடிகர் யாஷ் ஏற்றுள்ளார். இந்திய அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை கிளப்பியிருக்கும் இந்த படம் 2 பாகங்களாக உருவாகி வருகிறது. இதில் முதல் பாகம் 2026 தீபாவளிக்கும், இரண்டாம் பாகம் 2027 தீபாவளிக்கும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
இந்த படத்தில் சர்வதேச அளவில் புகழ்பெற்ற இந்திய இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரகுமானும், லயன் கிங், கிளாடியேட்டர் இன்டர்ஸ்டெல்லார் உள்ளிட்ட உலகப்புகழ் பெற்ற படங்களுக்கு இசையமைத்த ஹான்ஸ் ஜிம்மரும் இந்த படத்தில் இணைந்து பணியாற்றுகின்றனர். சமீபத்தில் கூட இந்த படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ மற்றும் டீசர் ஆகியவை வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளன.
இந்த நிலையில், ராமாயணா' படத்தின் இந்தி தியேட்டர் விநியோக உரிமையை மட்டும் ரூ.450 கோடிக்கு தயாரிப்பாளர் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்திய சினிமா வரலாற்றிலேயே ஒரு படத்தின் இந்தி விநியோக உரிமைக்கு இவ்வளவு பெரிய தொகையை கேட்பது இதுவே முதல்முறையாகும். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாத நிலையில், ‘ராமாயணா’ படத்தின் வியாபாரம் இந்திய சினிமாவில் புதிய வரலாறு படைக்குமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.