மலையாள திரையுலகில் பரபரப்பு சம்பவம்: மோகன்லால், திலீப்பிடம் லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணை

தங்கம் மோசடி விவகாரத்தில் அடுத்தடுத்து நடிகர்களிடம் விசாரணை நடத்தும் சம்பவம் கேரள திரையுலகத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

மலையாள திரையுலகில் பரபரப்பு சம்பவம்: மோகன்லால், திலீப்பிடம் லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணை
Published on

திருவனந்தபுரம்,

சபரிமலை அய்யப்பன் கோவிலில் துவார பாலகர் சிலை தங்கம் திருட்டு மற்றும் கருவறை வாசல் நிலை தங்கம் திருட்டு தொடர்பான 2 வழக்குகள் கேரளாவில் ஆளும்கட்சி பிரமுகர்கள், அதிகாரிகளை ஆட்டி படைத்து வருகிறது. இதனிடையே சபரிமலையில் தங்க கொடி மரம் நிறுவியதிலும் மோசடி நடந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தங்க தகடுகள் பதிக்க சினிமா பிரபலங்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் என 27 பேர் காணிக்கையாக தங்கம் வழங்கியதாக கூறப்படும் நிலையில், அதற்கான எந்த ஆவணங்களும் அதிகாரிகளிடம் இல்லை என்பது அம்பலமானது. இதனை தொடர்ந்து 20 பேரிடம் விசாரணை நடத்திய லஞ்ச ஒழிப்பு போலீசார் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மத்திய மந்திரி சுரேஷ்கோபியிடம் விசாரணை நடத்தினர்.

தங்க கொடி மரத்திற்கு சுரேஷ்கோபி தங்கத்தை நன்கொடை யாக வழங்கியுள்ளார். இதுதவிர நன்கொடையாக நடிகர்கள் சிலரிடமும் பெற்றுக் கொடுத்துள்ளார். அதனை போலீசார் வாக்குமூலமாக பதிவு செய்தனர். இதனை தொடர்ந்து நடிகர்கள் மோகன்லால், திலீப் ஆகியோரிடம் நேற்று விசாரணை நடத்தி வாக்குமூலத்தை பதிவு செய்தனர். எவ்வளவு தங்கம் வழங்கினீர்கள், யார் மூலம் கொடுத்தீர்கள் என்ற விவரத்தை கேட்டறிந்தனர். தங்கம் மோசடி விவகாரத்தில் அடுத்தடுத்து நடிகர்களிடம் விசாரணை நடத்தும் சம்பவம் கேரள திரையுலகத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com