

சென்னை,
"நஸ்லேன்... மை காட்! என்ன ஒரு அற்புதமான நடிகர். நம்ப முடியாத அளவுக்கு வசீகரமும், திரையில் தனித்துவமான ஆளுமையும் கொண்டிருக்கிறார். எதிர்காலத்தில் உருவாகப்போகும் சூப்பர் ஸ்டார் நீங்கள். நிச்சயமாக திரையுலகையே ஆளப்போகிறீர்கள்" என்று அட்லீ புகழ்ந்துள்ளார்.
நடிகர் சூர்யா நடிப்பில், மலையாள இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சீன்’. இப்படத்தில் சூர்யாவுடன் மலையாள இளம் நடிகர் நஸ்லேன், நடிகை நஸ்ரியா நஜிம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், ஆனந்தராஜ், லால் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். சுஷின் ஷ்யாம் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 6-ம் தேதி வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. குறிப்பாக, சூர்யாவின் நடிப்பும், படத்தின் வித்தியாசமான கதைக்களமும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. இப்படம் உலகம் முழுவதும் ரூ.170 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், ‘சீன்’ திரைப்படத்தைப் பார்த்த இயக்குநர் அட்லீ, படக்குழுவினரைப் பாராட்டி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "நீண்ட நாட்களுக்குப் பிறகு புதுமையான கதைக்களத்துடன் ஒரு சிறந்த கமர்ஷியல் திரைப்படத்தைப் பார்த்துள்ளேன். ஜித்து மாதவனின் கதை சொல்லும் பாணிக்கு நான் எப்போதுமே ரசிகன். இந்தப் படம் மிகவும் சிறப்பாக உள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து நடிகர் சூர்யாவின் நடிப்பைப் பாராட்டிய அவர், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் திரையரங்கில் ரசிக்கக்கூடிய முழுமையான பொழுதுபோக்குத் திரைப்படம் என்றும் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, மலையாளத்தில் ‘பிரேமலு’ திரைப்படத்தின் மூலம் பிரபலமான நஸ்லேனின் நடிப்பு அட்லீயை வெகுவாகக் கவர்ந்துள்ளது. இதுகுறித்து அவர், "நஸ்லேன்... மை காட்! என்ன ஒரு அற்புதமான நடிகர். நம்ப முடியாத அளவுக்கு வசீகரமும், திரையில் தனித்துவமான ஆளுமையும் கொண்டிருக்கிறார். எதிர்காலத்தில் உருவாகப்போகும் சூப்பர் ஸ்டார் நீங்கள். நிச்சயமாக திரையுலகையே ஆளப்போகிறீர்கள்" என்று புகழ்ந்துள்ளார்.
மேலும், நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ் சினிமாவுக்குத் திரும்பியுள்ள நஸ்ரியாவின் நடிப்பையும் அட்லீ பாராட்டியுள்ளார். அவரது இயல்பான நகைச்சுவை உணர்வு, வசீகரம் மற்றும் சிறிய நடிப்பு நுணுக்கங்கள் அனைத்தும் சிறப்பாக இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், நடிகர் ஆனந்தராஜின் நகைச்சுவை நடிப்பு, இசையமைப்பாளர் சுஷின் ஷ்யாமின் இசை மற்றும் படக்குழுவினரின் உழைப்பையும் பாராட்டியுள்ளார். தயாரிப்பு நிறுவனத்துக்கும் சூர்யா - ஜோதிகா தம்பதிக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.