

சென்னை,
பதவியில் இருக்கும் ஒரு துணை மந்திரி தமிழ் திரைப்படத்தில் நடிப்பது இதுவே முதல் முறை என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இதனால் இப்படம் ரசிகர்கள் மத்தியில் கூடுதல் கவனம் பெற்றுள்ளது.
தமிழ் திரையுலகில் புதுமையான கதைக்களங்களுடன் பல்வேறு திரைப்படங்கள் உருவாகி வருகின்றன. அந்த வகையில், புலனாய்வு மற்றும் குற்றப் பின்னணியில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘இரும்புத் தோட்டம்’. இப்படத்தின் மூலம் மலேசிய அரசியலில் பதவி வகிக்கும் துணை மந்திரி ஒருவர் தமிழ் திரையுலகில் நடிகராக அறிமுகமாகியுள்ளார்.
ஏ.வி.எல்.டி. புரொடக்ஷன் சார்பில் ஜெகன் ஜோன் பீட்டர் தயாரித்துள்ள இப்படத்தை ஜெய்தேவ் ஜெயகுமார் எழுதி இயக்கியுள்ளார். முழுக்க முழுக்க மலேசியாவில் படமாக்கப்பட்டுள்ள இப்படத்தில், விஜய்யின் ‘தி கோட்’, ‘ஜனநாயகன்’ ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் கவனம் பெற்ற இர்பான் ஜைனி கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும், லோகவர்மன் ஸ்ரீதரன், மேரி தாஷனி மேத்யூஸ், மோகன்ராஜ், துர்காஷினி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்தின் முக்கிய சிறப்பம்சமாக, மலேசியாவின் தேசிய ஒருமைப்பாட்டுத்துறை துணை மந்திரி யுனேஸ்வரன் ராமராஜ் நடித்துள்ளார். அவர் ‘துவான் தெய்வீகன்’ என்ற சிறப்புத் தோற்றத்தில் திரையில் தோன்றுகிறார். பதவியில் இருக்கும் ஒரு துணை மந்திரி தமிழ் திரைப்படத்தில் நடிப்பது இதுவே முதல் முறை என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இதனால் இப்படம் ரசிகர்கள் மத்தியில் கூடுதல் கவனம் பெற்றுள்ளது.
ஒரு மாணவியின் மர்மமான கொலையும், அதனைத் தொடர்ந்து வெளிவரும் பல்வேறு மர்மங்களும் படத்தின் கதைக்களமாக அமைந்துள்ளன. புலனாய்வு மற்றும் கிரைம் திரில்லர் பாணியில் இப்படம் உருவாகியுள்ளது. டி.கே. தினேஷ்குமார் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு சமேஷன் மணிமாறன் இசையமைத்துள்ளார். விரைவில் திரைக்கு வரவுள்ள ‘இரும்புத் தோட்டம்’ திரைப்படத்தை ஹாவென் பிக்சர்ஸ் சார்பில் ஆர்.கே. கண்ணன் வெளியிடுகிறார்.