ஆசிட் போல விமர்சனம்; தடுக்க சட்ட நடவடிக்கை வேண்டும் - இயக்குனர் வசந்தபாலன்

ஒரு திரைப்படம் வெளியானால் வெளியான தேதியில் இருந்து ஒரு வாரத்திற்கு திரை விமர்சனம் வெளிவராமல் தடுக்க வேண்டும் என இயக்குனர் வசந்த பாலன் தெரிவித்துள்ளார்.
ஆசிட் போல விமர்சனம்; தடுக்க சட்ட நடவடிக்கை வேண்டும் - இயக்குனர் வசந்தபாலன்
Published on

சென்னை,

சமீபத்தில் வெளியான சூர்யாவின் கங்குவா திரைப்படம் மிகப்பெரிய அளவில் நெகட்டிவ் விமர்சனங்கள் வழங்கப்பட்டதால் அந்த படத்தின் வசூல் குறைந்து உள்ளதாக கூறப்படுகிறது. ஆரம்பத்தில் நல்ல வசூல் பெற்று வந்தநிலையில் தற்போது பாக்ஸ் ஆபிஸ் வசூலில் திணறி வருகிறது. இந்தப் படத்திற்கான விமர்சனங்களையொட்டி சில விவாதங்களே எழுந்துள்ளன.

வெயில், அங்காடித் தெரு, அரவான், காவியத் தலைவன், ஜெயில் உள்ளிட்ட பல படங்களை வசந்தபாலன் இயக்கியுள்ளார்.

திரைவிமர்சனம் குறித்து இயக்குனர் வசந்த பாலன் 'நான் திருப்பூர் சுப்ரமணியம் கருத்தை ஆதரிக்கிறேன். தயாரிப்பாளர்கள் சங்கம் விமர்சனங்கள் விஷயத்தில் விரைவில் முடிவெடுக்கவேண்டும். ஆசிட் ஊற்றுவது போல வருகிற விமர்சனங்கள் ஒரு வாரம் வரை இணையதளங்களில் வரவிடாமல் தடுக்க சட்ட நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்' எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக திருப்பூர் சுப்பிரமணியம் திரைவிமர்சனம் குறித்து கூறியபோது, "நான் கடந்த 44 ஆண்டுகளாக திரைப்பட விநியோகஸ்தர் தொழிலில் இருக்கிறேன். எனக்குப் பிடிக்காத படத்தின் 100-வது நாள் வெற்றியை நானே நடத்தியிருக்கிறேன். அன்னக்கிளி, 16 வயதினிலே போன்ற படங்கள் வெளியானபோது சரியான வரவேற்பை பெறவில்லை. படம் நன்றாக இருக்கிறது என சொல்லிச் சொல்லியே பெரிய வெற்றியைப் பெற்றன. இன்று பக்கத்து மாநிலத்திற்குச் சென்று அதிகாலைக் காட்சியில் படம் பார்த்துவிட்டு விமர்சனம் என்கிற பெயரில் வாய்க்கு வந்ததை யூடியூபர்கள் பேசுகின்றனர். இதனால், சினிமா தொழிலே நாசமாகப் போகிறது. எந்தக் காட்சி நன்றாக இல்லை என்பதைக் குறிப்பிடுவதைத் தவிர்த்து மொத்த படத்தையும் எதிர்மறையாக அணுகுகின்றனர். இந்தியன் - 2, வேட்டையன், கங்குவா படங்களின் வசூல் குறைந்ததற்கு இந்த விமர்சனங்களே காரணம். படம் வெளியாகி இரண்டு வாரங்கள் வரை விமர்சனங்கள் வரக்கூடாது என்கிற தடை உத்தரவை வாங்க தயாரிப்பாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com