மர்மநபர் தாக்கியதாக குற்றச்சாட்டு - காயத்துடன் புகைப்படம் வெளியிட்ட வனிதா விஜயகுமார்

அந்த நபர் பைத்தியக்காரனைப்போல் சிரித்தது என் காதுகளில் கேட்டுக்கொண்டே இருக்கிறது என்று வனிதா விஜயகுமார் கூறியுள்ளார்.
மர்மநபர் தாக்கியதாக குற்றச்சாட்டு - காயத்துடன் புகைப்படம் வெளியிட்ட வனிதா விஜயகுமார்
Published on

சென்னை,

பிரதீப் ஆண்டனியின் ஆதரவாளர் என்று கூறிக்கொண்ட மர்மநபர் ஒருவர், தன்னை தாக்கியதாக நடிகை வனிதா விஜயகுமார் முகத்தில் காயத்துடன் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் அவர் தெரிவித்து இருப்பதாவது:-

நான் பிக்பாஸ் 7 நிகழ்ச்சியின் விமர்சனத்தை முடித்து விட்டு இரவு உணவு சாப்பிட்டுவிட்டு, என்னுடைய சகோதரி சவுமியா வீட்டு அருகே இருட்டான பகுதியில் நிறுத்தியிருந்த எனது காரை நோக்கி நடந்தேன். அப்போது எங்கிருந்தோ வந்த மர்மநபர் ஒருவர், தன்னை பிரதீப் ஆண்டனியின் ஆதரவாளர் என்று கூறி, "ரெட் கார்டு கொடுக்கிறீங்களா? அதுக்கு நீ சப்போர்ட்டு வேறா? என்று சொல்லி என் முகத்தில் பலமாக தாக்கிவிட்டு தப்பி ஓடிவிட்டார்.

என் முகத்தில் ரத்தம் வழிந்தது. நான் வலியில் கத்தினேன். நள்ளிரவு 1 மணியளவில் இந்த சம்பவம் நடந்ததால் சுற்றிலும் யாரும் இல்லை. நான் என் சகோதரியை கீழே வர அழைத்தேன். இந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் செய்யும்படி அவர் என்னை வற்புறுத்தினார். போலீசில் புகார் அளிப்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை என்று அவரிடம் கூறினேன்.

காயத்திற்கு முதலுதவி செய்துவிட்டு ஆத்திரத்துடன் வீட்டை விட்டு வெளியேறி தாக்கியவரை அடையாளம் காண நினைத்தேன்; முடியவில்லை. அந்த நபர் பைத்தியக்காரனைப் போல் சிரித்தது என் காதுகளில் கேட்டுக்கொண்டே இருக்கிறது. நான் திரையில் தோன்றும் அளவுக்கு உடல் நலத்துடன் இல்லாததால் எல்லாவற்றிலிருந்தும் ஓய்வு எடுத்துக் கொள்கிறேன். கலங்கிய மக்களை ஆதரிப்பவர்களுக்கு ஆபத்து ஒரு அடி தூரத்தில் உள்ளது. இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.

நடிகை வனிதா விஜயகுமார் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com