

சென்னை,
“மணிரத்னம் சார் இயக்கத்தில் ஒரு காதல் படத்தில் நடிக்க வேண்டும் என்பது எப்போதுமே எனது ஆசையாக இருந்தது. அது எனது நீண்ட நாள் கனவு. காதலை அவர் காட்சிப்படுத்தும் விதம் எனக்கு மிகவும் பிடிக்கும்.” என்று விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.
‘செக்கச் சிவந்த வானம்’ திரைப்படத்துக்குப் பிறகு நடிகர் விஜய் சேதுபதி மீண்டும் இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் நடித்து வருகிறார். மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய காதல் திரைப்படத்தில் விஜய் சேதுபதி மற்றும் சாய் பல்லவி முதன்முறையாக இணைந்து நடிக்கின்றனர்.
மணிரத்னம் இயக்கும் இப்படத்துக்கு ‘இஞ்சி வெல்லம்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு மணிரத்னம் இயக்கும் காதல் கதைக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.
மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படம் காதலை மையமாகக் கொண்டு உருவாகி வருகிறது. மணிரத்னம் மீண்டும் காதல் கதைக்களத்துக்கு திரும்பியிருப்பதால் படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், சமீபத்திய நேர்காணல் ஒன்றில் விஜய் சேதுபதி மணிரத்னத்துடன் பணியாற்றியது குறித்து பேசியுள்ளார். அவர் கூறியதாவது: “மணிரத்னம் சார் இயக்கத்தில் ஒரு காதல் படத்தில் நடிக்க வேண்டும் என்பது எப்போதுமே எனது ஆசையாக இருந்தது. அது எனது நீண்ட நாள் கனவு. காதலை அவர் காட்சிப்படுத்தும் விதம் எனக்கு மிகவும் பிடிக்கும். காதலை அழகாகவும், ரசிக்கும்படியும் திரையில் வெளிப்படுத்துவதில் அவர் மிகுந்த ஆர்வம் கொண்டவர். என் வாழ்க்கையில் ஒரு முறையாவது அவருடன் பணியாற்ற வேண்டும் என்று விரும்பினேன். அந்த ஆசை இந்தப் படத்தின் மூலம் நிறைவேறியுள்ளது.
என் வாழ்க்கையில் இதுபோன்ற பல ஆச்சரியமான விஷயங்கள் நடந்துள்ளன. ‘மகாராஜா’ திரைப்படம் ஹாலிவுட்டில் விற்பனையானது, இந்தி படத்தில் நடித்தது, மணிரத்னம் சார் படத்தில் நடித்தது என எதிர்பாராத பல விஷயங்கள் நடந்திருக்கின்றன. குமுதா ஹேப்பி அண்ணாச்சி!” என்று விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.